டென்னிஸ் ஆட்டத்தின்போது மாதவிடாய் வலியால் துடித்த வீராங்கனை வேதனை!

டென்னிஸ் ஆட்டத்தின்போது ஏற்பட்ட மாதவிடாய் கால வலியால், சீன வீராங்கனை கின்வென் செங் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றோடு வெளியேறினார்.

டென்னிஸ் ஆட்டத்தின்போது ஏற்பட்ட மாதவிடாய் கால வலியால், சீன வீராங்கனை கின்வென் செங் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றோடு வெளியேறினார். முன்னதாக, பெல்ஜியம், ரோம் மற்றும் பிரான்ஸ் நாட்டு வீராங்கனைகளுக்கு எதிராக முதல் மூன்று சுற்றுகளில் அவர் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில், “டென்னிஸ் கோர்ட்டில் நான் ஆணாக இருந்திருக்கலாம்…” என அந்த ஆட்டத்திற்குப் பின்னர், அவர் மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

சீனாவை சேர்ந்த 19 வயதான கின்வென் செங், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கு எதிராக விளையாடினார். முதல் செட் முடிந்த நிலையில், இரண்டாவது செட் ஆட்டத்தின் போது, அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ ரீதியான டைம்-அவுட் எடுத்துக் கொண்டார். இருப்பினும் அவரால் ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கு பிறகு அவர் உருக்கமாக சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

அவர் கூறியதாவது, “எனக்கு காலில் வலி இருந்தது. இருந்தாலும் எனக்கு ஏற்பட்ட வயிற்று வலியுடன் ஒப்பிடும்போது அது பெரிய வலி இல்லை. வயிற்று வலியுடன் என்னால் விளையாட முடியவில்லை. இது பெண்கள் விஷயம். மாதவிடாய் காலங்களில் முதல் நாள் மிகவும் கடினமானது. பொதுவாகவே முதல் நாளன்று எனக்கு வலி சற்று அதிகம் இருக்கும்.

வலியுடன் விளையாடியபோது அந்த தருணத்தில், டென்னிஸ் கோர்ட்டில், நான் ஆணாக இருந்திருக்கலாம் என எண்ணினேன். ஆணாக இருந்திருந்தால் இது போன்ற பாதிப்புகளுக்கு நான் ஆளாகி இருக்க வேண்டியதில்லை. இந்த பாதிப்பால் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

அடுத்த முறை நிச்சயமாக சிறப்பாக தயாராகி, அவருக்கு எதிராக விளையாட நான் ஆவலோடு உள்ளேன்” என தெரிவித்தார். 19 வயதான அவர் தற்போது உலக தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளார் மற்றும் இளம் வயதிலேயே குறிப்பிடத்தக்க டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருகிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன்முறையாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மூலம், அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!