வாழ்க்கைத் துணையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..?

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.


கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும், தனிமையான நேரங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவை முக்கியமானவை. இருவரில், ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் இடையூறு ஏற்பட்டாலும், உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே சிக்கலை கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், உறவை மகிழ்ச்சியாக நீட்டிக்கலாம். எத்தகைய நேரங்களில் தனிமை தேவைப்படும் என்பதை இங்கே காண்போம்.

விரக்தியாக இருத்தல்:

உங்கள் வாழ்க்கைத்துணை இறுக்கமாக இருக்கும் தருணங்களில், யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கவே தோன்றும். ஏதோ ஒரு பொருளை இழந்ததுபோல், விரக்தியுடனே இருப்பார்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருப்பது போலத் தோன்றும். எதைக் கேட்டாலும், எரிச்சலுடன் கோபமடைவார்கள். இத்தகைய சமயங்களில் அவர்களோடு வாதிடாமல், சற்று அமைதியாக இருப்பது அவசியம்.

மகிழ்ச்சியான தருணங்களை ஒதுக்குதல்:

இதுநாள் வரை வாழ்க்கைத் துணையுடன் இணைந்து, வார இறுதி நாட்களில், வெளியிடங்களுக்கு செல்லவோ, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவோ திட்டமிட்டிருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணை, அவரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவதாக உணரும்போதோ அல்லது, அவருக்கான ஆசை, விருப்பம் நிறைவேறாமல் பறிபோவதாக நினைத்தாலோ அதற்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். வழக்கமாக நீங்கள் போடும் திட்டங்களைத் திடீரென பொய்க்காரணம் கூறி ரத்து செய்யலாம். இது ஒரு முறை நடக்கும்போது, பெரிது படுத்த தேவையில்லை. அதுவே, தொடரும்போது, கட்டாயம் அதில் கவனம் செலுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

எதையும் விவாதிக்க மாட்டார்:

அலுவலகத்தில் நடப்பவை, குடும்பத்தில் நடப்பவை என அனைத்து விஷயங்களையும் தினமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கைத்துணையின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்படும்போது, அவருக்குள் ஏற்படும் மாறுபாட்டால், அதை உங்களிடம் விவாதிக்க விரும்பாமல் மறுக்கலாம். அவ்வாறு இருக்கும்போது அவரிடம், மேற்கொண்டு எதையும் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தாமல், இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அமைதியாய் இருப்பது நல்லது.

காரணமின்றி சண்டை போடுதல்:

வாழ்க்கைத் துணையிடம் சண்டையிடுவது இயல்புதான். ஆனால், அதற்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் எப்போதும் சண்டையிட்டு, பிரச்சினையைப் பெரிதாக்க முயல்வதாகத் தெரிந்தால், வாழ்க்கைத் துணைக்குச் சற்று அமைதி தேவை என புரிந்து கொள்ளுங்கள். அப்போது, அங்கிருந்து விலகி சில மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க முயலுங்கள். மேலும், துணைக்கு எந்த வகையில், சுதந்திரம் தேவை என்பதைக் கேட்டுத் தெளிவடைவது சிறந்தது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!