30 வயதுக்குள் இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்!

கால்கள் களைப்பை உணராமல் சுழலும் பருவமான முப்பது வயதை எட்டுவதற்குள் இந்தியாவில் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள் ஏராளம் உள்ளன.


இன்றைய இளம் தலை முறையினர் சாகச சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டு கிறார்கள். நெருக்கடி மிகுந்த நகர வாழ்வியலில் இருந்து சில நாட்கள் விடுபட்டு பசுமையும், அமைதியும் சூழ்ந்திருக்கும் இடங்களுக்கு சென்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

உற்சாகத்துடன் மலையேற்ற பயணங்கள், மலை சூழ்ந்த இடங்களுக்கு செல்லும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கால்கள் களைப்பை உணராமல் சுழலும் பருவமான முப்பது வயதை எட்டுவதற்குள் இந்தியாவில் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள் ஏராளம் உள்ளன. சிரபுஞ்சியில் குளிர் சாரலுக்கு மத்தியில் மர பாலத்தில் நடப்பது முதல் லடாக் முழுவதும் சாலை மார்க்கமாக பைக் பயணம் மேற்கொண்டு விட்டு இமயமலையில் மலர்கள் பள்ளத்தாக்கு வழியாக மலையேற்றம் வரை அழகான நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். அவற்றுள் சிலவற்றின் பட்டியல் இது.

  1. சோலாங் பள்ளத்தாக்கு:

இமாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கு சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளுடன் போட்டியிடும் அளவுக்கு வசீகரம் கொண்டது. பசுமை தவழும் மலை பிரதேசங்கள், பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கும் குளிர்ச்சியான கால நிலை போன்ற இயற்கை அழகை ரசிக்க சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டியதில்லை.

மலையில் மோதியபடி சுழன்று வரும் மலைக்காற்றை கண்களை மூடி ரசிப்பதே அலாதி அனுபவத்தை கொடுக்கும். கண்களை திறப்பதற்குள் மாறுபட்ட சூழலை உணர வைக்கும். பனி மூடிய மலைகள், பசுமையான காடுகள், வான் மேகக்கூட்டங்கள் ஆகியவை ஒருசேர சங்கமிக்கும் இயற்கை அழகை ரசிப்பதற்கு கண்கள் இரண்டு போதாது. காற்றின் தழுவல் திக்குமுக்காட செய்துவிடும். சோலாங் பள்ளத்தாக்கு குறிப்பாக நண்பர்களுடன் சென்று பார்க்கச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

  1. சந்திரதல்:

இமாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் உயரமான ஏரி களுள் இது முதன்மையானது. சந்திரனை போன்ற பிறை வடிவத்தில் மேகக்கூட்டங்களுள் காட்சியளிப்பது போல் பனி படர்ந்த மலை முகடுகளுக்கு மத்தியில் உள்ளது. அதன் இயற்கை சூழலும், அங்கு நிலவும் நிசப்தமும் வேறொரு கிரகத்திற்கு சென்றிருக்கும் உணர்வை தரும்.

இந்தியாவின் மிக அழகான ஏரிகளில் ஒன்றாகவும் சந்திரதல் வர்ணிக்கப்படுகிறது. மலையேற்றத்தை விரும்புபவர் களின் கனவு பட்டியலில் இந்த ஏரி நிச்சயம் இடம் பிடிக்கும். பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்ட இந்த ஏரிக்கு ஒருமுறை சென்றால் அது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

  1. கூர்க்:

‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படும் கூர்க், இயற்கை அழகை நேசிப்பவர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. குளிர்ச்சியான கால நிலை, பசுமை படர்ந்திருக்கும் வனங்கள், நிகரற்ற அமைதியை வழங்கும் இயற்கை காட்சிகள் என கூர்க்கின் அழகியல் நினைவை விட்டு என்றென்றும் நீங்காதது. காபி தோட்டங்கள் சூழ்ந்த பகுதிக்கு அருகில் சென்றாலே காற்றை நிரப்பும் காபியின் வாசமும், வாசனைத் திரவியங்களும் சிலிர்க்க வைத்துவிடும். இந்தியாவிலேயே சிறந்த மற்றும் பாதுகாப்பான இடங்களை பார்வையிட விரும்புபவர்கள் கர்நாடகாவின் கூர்க்கை தவிர்க்க முடியாது.

  1. அந்தமான்:

நீங்கள் தண்ணீருக்கு பயப்படுகிறீர்களா? இதுநாள் வரை தண்ணீரில் நீந்தவில்லையா? அந்தமான் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். கடல், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் கால் வைப்பதற்கு தயங்குபவர்களும் அந்தமானுக்கு சென்றால் ஆழ்கடலுக்குள் ஸ்கூபா டைவிங் செல்ல ஆசைப்படுவார்கள். கடலுக்கு அடியில் சென்று கடல்வாழ் உயிரினங்களின் வாழ் வியலை ரசித்துவிட்டு திரும்பிவர தோன்றும். சொர்க்கத்தில் இருப்பதை போல மிதக்க விரும்பும் நீர்வாழ் பிரியர்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாக அந்தமான் விளங்குகிறது.

  1. புஷ்கர்:

வரலாறு, கலாசாரம் என பண்டைய வாழ்வியலுக்குள் மூழ்கியிருக்கும் பழமையான ராஜஸ்தான் நகரங்களுள் இதுவும் ஒன்று. மேலும் புஷ்கர் இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது. ராஜஸ்தானிய கலாசாரத்தை பறை சாற்றும் புஷ்கர் மேளா பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அம்சங்களை கொண்டது. புஷ்கர் சென்றால் ஒட்டக சவாரி செய்ய மறக்காதீர்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!