சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கினார்..!

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்பட மேலும் 7 பேர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். அவர் ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி இருந்தார். இவர் படித்த காலத்தில் பாலியல் ரீதியாக பலரால் துன்புறுத்தப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இவர் மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு இவர் படிப்பை முடித்து விட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பரபரப்பு புகார் மனு கொடுத்தார். கோட்டூர்புரம் போலீசார் பாலியல் துன்புறுத்தல், மானபங்கம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்கு மூலத்தில் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன்படி 2 ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு போடப்பட்டது.

ஐ.ஐ.டி. பேராசிரியர்கள்

குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 2 பேர் வெளிநாடு சென்றுவிட்டதால், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்பட மீதம் உள்ள 6 பேருக்கு சம்மன் அனுப்பி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இவர்களில் மாணவியின் வாக்குமூலப்படி முக்கிய முதல் குற்றவாளி மேற்கு வங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்டம், ராய்நகரைச் சேர்ந்த கிங்சூப்தேவ் சர்மா என்பவர் ஆவார். இவரிடமும் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இவர் முன்ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கற்பழிப்பு சட்டபிரிவை சேர்க்கச்சொல்லியும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை எழுந்தது. இதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

முக்கிய குற்றவாளி கைது

இதனால் இந்த வழக்கில் கற்பழிப்பு சட்டப்பிரிவும், தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவும் புதிதாக சேர்க்கப்பட்டது. வழக்கு விசாரணை உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியனின் தலைமையில் மாற்றப்பட்டது.

தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளியான கிங்சூப்தேவ் சர்மாவை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மேற்கு வங்காள மாநிலம் சென்றனர். குற்றவாளி கிங்சூப்தேவ் சர்மா நேற்று கைது செய்யப்பட்டார். அவரை மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பிடிவாரண்டு பெற்று சென்னை அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முன்ஜாமீன் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததால், கிங்சூப்தேவ் சர்மாவின் முன்ஜாமீன் ரத்தாகி விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.- source: .dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!