ஆர்.ஆர்.ஆர் திரைவிமர்சனம்!

நடிகர் ராம்சரண் தேஜா
நடிகை ஆலியா பட்
இயக்குனர் ராஜமௌலி எஸ்.எஸ்.
இசை கீரவாணி
ஓளிப்பதிவு செந்தில் குமார்


1900 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வரும் போது, பழங்குடியின மக்களில் ஒரு சிறுமியை ஆங்கிலேயர்கள் அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர். அந்த சிறுமியை மீட்பதற்காக பழங்குடியின மக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் திட்டம் போடுகிறார்.

அதே சமயம் ஆங்கிலேயர்கள் படையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராம் சரண், தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறார். இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் சிறுமியை மீட்க வந்திருப்பதை அறிந்துக் கொண்ட ஆங்கிலேயர்கள், அவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரி பதவி கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள்.

இதனால், ஜூனியர் என்டிஆரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ராம் சரண். இதற்கிடையில் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ளாமல் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நட்பாகிறார்கள். இறுதியில் ஜூனியர் என்டிஆர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறுமியை மீட்டாரா? ஜூனியர் என்டிஆரை, ராம் சரண் தடுத்தாரா? இவர்களின் நட்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பழங்குடியினர் கதாபாத்திரத்திற்கு ஜூனியர் என்டிஆர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தண்டனை பெறும் காட்சியில் மனதை உழுக்க வைக்கிறார். அதுபோல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் ராம் சரண். காதல், தந்தைக்கு கொடுத்த சத்தியம், லட்சியம் என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.

பிற்பாதியில் வரும் அஜய் தேவ்கன் போராளியாக மனதில் நிற்கிறார். ஸ்ரேயாவிற்கு பெரியதாக வேலை இல்லை. ஆலியா பட், ராம் சரண் காதலியாக வந்து கவர்ந்து இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்திற்கு பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. அதே அளவு பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். சிறிய கதையை வைத்து அதில் சுதந்திர போராட்ட திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். பல காட்சிகளை பிரமாண்டமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

கீரவாணி இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்திருக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகள் பிரமாண்டமாக தெரிய உதவியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் இடம் பெறும் நடனங்கள் ரசிக்க வைக்கிறது. இறுதியாக வரும் பாடலில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ பிரம்மாண்டம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!