உணவு, தண்ணீர் இன்றி பாறை இடுக்கில் 2 நாட்களாக சிக்கி தவிக்கும் வாலிபர்!

பாலக்காட்டைச் சேர்ந்த வாலிபர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட நிலையில், ராணுவம் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவரை மீட்க ராணுவம் உதவி கேட்கப்பட்டது. ராணுவம் நேற்று இரவில் இருந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி அந்த வாலிபர் சிக்கியுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!