உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விரதம் இருந்து பார்த்த லதா மங்கேஷ்கர்!

லதா மங்கேஷ்கரை கவுரவிக்க விரும்பிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டை இலவசமாக வழங்கியது.

இசை உலகில் ஜாம்பவனாக திகழ்ந்தாலும் லதா மங்கேஷ்கருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத காதல். தீவிர ரசிகரான இவர் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை பார்க்க தவறுவதில்லை.

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை கைப்பற்றிய போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்போதைய கிரிக்கெட் வாரியம் போட்டியில் வெற்றியை ஈட்டி தந்த வீரர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்தது. இதற்கான பணத்தை திரட்ட அவர்கள் ஒரு இசைக்கச்சேரி நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக அப்போதைய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், லதா மங்கேஷ்கரை சந்தித்து கேட்டனர். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து டெல்லியில் லதா மங்கேஷ்கரின் இசைக்கச்சேரி டெல்லி உள் அரங்கில் நடந்தது. கிரிக்கெட் வாரியத்திற்காக லதா மங்கேஷ்கர் இலவசமாக நடத்தி கொடுத்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வாரியத்திற்கும் தேவையான பணம் கிடைத்தது.

இந்த பணத்தை கிரிக்கெட் வாரியம் உலக கோப்பையை கைப்பற்றிய வீரர்களுக்கு வழங்கியது. அதன்பின்பு இந்த பணத்தை திரட்டி கொடுத்த லதா மங்கேஷ்கரை கவுரவிக்க விரும்பிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டில் 2 டிக்கெட்டை இலவசமாக வழங்கியது.

லதா மங்கேஷ்கர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் போட்டியை பார்க்க தவறுவதில்லை. 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை லதா மங்கேஷ்கர் விரதம் இருந்து பார்த்தாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!