‘டேட்டிங்’ செய்ய முயன்ற என்ஜினீயருக்கு நடந்த சோகம்!

இளம்பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்ய முயன்று ரூ.88 ஆயிரத்தை இழந்த என்ஜினீயர் ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 42 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). என்ஜினீயரான இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ராஜேசின் செல்போனுக்கு இளம்பெண்களிடம் ‘டேட்டிங்’ செய்ய விருப்பமா? என்று கேட்டு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு ராஜேஷ் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் உங்களுடன் ‘டேட்டிங்’ செய்ய இளம்பெண்களை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறினார்.

இதற்கு ஒப்புக்கொண்ட ராஜேஷ் ரூ.1,200-ஐ இளம்பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்ய முன்பணமாக செலுத்தினார். சிறிது நேரத்தில் ராஜேசை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண் தனது பெயர் சுவாதி மிஸ்ரா என்று கூறினார். மேலும் என்னுடன் ‘டேட்டிங்’ செய்ய வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த பெண் கூறியதன்பேரில் மேலும் ரூ.86 ஆயிரத்து 900-ஐ ராஜேஷ் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த பெண் ராஜேசுடன் ‘டேட்டிங்’ செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் தன்னிடம் பேசிய நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் தன்னை ஏமாற்றி ரூ.88 ஆயிரத்தை 2 பேரும் மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!