‘மிதக்கும் இல்லம்’ சிறுமியின் கண்டுபிடிப்புக்கு பால புரஸ்கார் விருது!

வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க ‘மிதக்கும் இல்லம்’ உருவாக்கிய விருதுநகர் சிறுமி விஷாலினிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதினை வழங்கியதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் அளித்தார்.

‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார்’ விருதை நேற்று நாடு முழுவதும் சிறுவர்-சிறுமிகள் 29 பேர் பெற்றனர். அவர்களில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி விஷாலினியும் (வயது 8) ஒருவர். இவருடைய தந்தை சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தை சேர்ந்த நரேஷ்குமார். இவர் ஐதராபாத் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தாயார் சித்ரகலா. விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர்.

சாதனை மாணவி விஷாலினி, ஐதராபாத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அதனைக்கண்ட விஷாலினி, வெள்ள பாதிப்பில் தவிப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏதாவது ஒரு உபகரணத்தை உருவாக்க வேண்டும் என யோசித்துள்ளார்.

அவர்களது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் ஒரு பலூனை பயன்படுத்தி விஷாலினி அவ்வப்போது நீச்சலடித்துள்ளார்.

எனவே அதனை அடிப்படையாக கொண்டு, வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை உருவாக்குவது குறித்து தனது தந்தையிடம் கூறி இருக்கிறார். அவரும் அதனை உருவாக்க உதவி இருக்கிறார்.

ராட்சத பலூன் போன்ற அந்த வீட்டில் உணவு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் செய்தனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறுமி விஷாலியின் இந்த முயற்சியை பாராட்டி அவருக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதினை விஷாலினிக்கு வழங்கியதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் அளித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!