ரகசிய கேமிராக்களை கோவில் குளியலறையில் வைத்தது யார்..?

விளாத்திகுளத்தில் கோவில் குளியலறையில் ரகசிய கேமிராக்களை வைத்தது தொடர்பாக கோவில் பூசாரி சந்தேகத்தின் பேரில் கூறிய நபர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிப்பறைகள், குளியல் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பவுர்ணமி பூஜையை முன்னிட்டு தரிசனத்திற்கு வந்த பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற போது, அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமிரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்த போது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்தது.

இது குறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது கோவில் நற்பெயரை கெடுக்கும் வகையில் சிலர் இது போன்று ஈடுபட்டுள்ளனர். சிலர் மீது சந்தேகம் உள்ளது எனவும் கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கூறும் போது ‘கேமராக்கள் ஒயர் இணைப்புடன் செயல்படக்கூடிய சாதாரண ரகத்தைச் சேர்ந்தவை. அவற்றில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. எனினும் கோவில் குளியலறைகளில் ரகசிய கேமிராக்கள் வைத்தவர்கள் விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விளாத்திகுளம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று 2-வது நாளாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் பூசாரி முருகன் சந்தேகத்தின் பேரில் கூறிய நபர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!