நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம்..?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.


முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம் கடினமானது. முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மென்மையாக போடவும். முட்டை அடிமட்டத்தை அடைந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றது. ஆனால் மூழ்காமல் ஒரே ஓரத்தில் மிதந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றதல்ல. அந்த முட்டையை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

முட்டையின் மீது சல்பர் வாசனை வருகிறதா என்பதை முகர்ந்து பார்க்க வேண்டும். ஒருவேளை அதில் எந்த வாசனையும் வரவில்லை என்றால் நீங்கள் அதனை சாப்பிடலாம். வாசனை வராமலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை உடைத்து முகர்ந்து பார்க்கவும். ஒருவேளை அதில் விரும்பத்தகாத வாசனை வந்தால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.

முட்டையை நன்றாக குலுக்குவது கூட முட்டை நல்ல முட்டையா இல்லையா என்பதை அறிய உதவும். முட்டையை உங்கள் காது அருகில் வைத்துக்கொண்டு நன்கு குலுக்கவும். முட்டைக்குள் ஏதெனும் நகர்வது போன்ற சத்தத்தை கேட்டால் அந்த முட்டை புதிய முட்டை அல்ல. அதனை தவிர்த்து விடுவது நல்லது, ஏனெனில் புதிய முட்டையில் நீங்கள் எந்த சத்தத்தையும் கேட்க இயலாது.

கெட்ட முட்டைகளில் நீங்கள் சில அடையாளங்களை பார்க்கலாம். முட்டையின் ஓட்டில் ஏதாவது விரிசல் இருந்தாலோ அல்லது பவுடர் இருந்தாலோ அந்த முட்டை நல்லதல்ல. ஏனெனில் விரிசல்கள் இருக்கும் முட்டைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. அந்த முட்டையை உடைத்து உள்ளே ஓட்டில் பார்க்கவும். ஓட்டில் பச்சை, நீலம், கருப்பு போன்ற நிறத்தில் ஏதவது இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி எதாவது இருந்தால் அந்த முட்டையை தவிர்த்து விடவும்.

முட்டை புதியதுதானா என்பதை கண்டறிய மற்றொரு சிறந்த வழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை கண்ணுக்கு நேராக வைத்து பார்க்கவும். பழைய முட்டையின் மஞ்சள் கருவானது உடனடியாகி பரவி விடும், ஆனால் புதிய முட்டையின் கரு அசையாமல் அப்படியே இருக்கும். முட்டையின் தரத்தை அறிய எளிய மற்றும் சிறந்த வழி இதுவாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!