கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் செய்த கொடூரம்!

சத்தாராவில் கர்ப்பிணி பெண் வனக்காவலர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

சத்தாரா மாவட்டத்தில் உள்ள பல்சவாடே கிராம வனப்பகுதி வனக்காவலராக பணி புரிந்து வரும் பெண் சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. தனது ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து சென்ற விவகாரம் உள்ளூர் வன நிர்வாக குழு தலைவரான ராமச்சந்திர ஜான்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இவர் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரும் ஆவார்.

இந்த பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று பெண் வனக்காவலருடன் ராமச்சந்திர ஜான்கர் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பெண் வனக்காவலரை பிடித்து சரமாரியாக தாக்கினார். கீழே போட்டு தரதரவென இழுத்தார். இந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளான பெண் வனக்காவலர் 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவர் தாக்கப்படும் சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.

பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி போலீசாரின் பார்வைக்கு சென்றதை அடுத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திர ஜான்கர் மற்றும் அவரது மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வனக்காவலரின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு இந்த தாக்குதலால் பாதிப்பு இருக்கிறதா? என கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் கருவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மேலும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நிருபர்களிடம் பேசிய பெண் வனக்காவலர் தனது கணவரும், அந்த தம்பதியால் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதில் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரேவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் வனக்காவலர் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!