கர்ப்பிணியாக்கியதால் அவமானம்… பிளஸ்-1 மாணவி சாவு – ஆசிரியர்-விடுதி வார்டன் கைது!

தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதால் அவமானம் அடைந்து விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். கர்ப்பத்துக்கு காரணமான டிரைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் கர்ப்பமானதை போலீசுக்கு தெரிவிக்காததால் தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

உண்டு உறைவிடப்பள்ளி

திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயதுடைய மாணவி சென்னை கோவளத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் தங்கள் மகளை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

வீட்டில் இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்று திடீரென எலிமருந்தை(விஷம்) சாப்பிட்டு விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

எழுதி காண்பித்தார்

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியிடம் விசாரிப்பதற்காக மகளிர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது மாணவி சுயநினைவின்றி இருந்தார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் ஓரளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவரால் பேச முடியவில்லை. மகளிர் போலீசார் தொடர்ந்து அவரிடம் பக்குவமாக பேசினர். அப்போது தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணமானவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரிபிரசாத் (31) என எழுதி காட்டினார். அவர் மாணவியின் வீட்டருகே வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.

டிரைவர் கைது

விடுமுறை நாட்களில் மாணவி வீட்டுக்கு வரும்போது டிரைவர் அரிபிரசாத் அவருடன் பழகியுள்ளார். அவர் மாணவியை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததில் கர்ப்பமானது தெரியவந்தது.இதனையடுத்து கர்ப்பத்துக்கு காரணமான அரிபிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மாணவி படித்த சென்னை உண்டு உறைவிட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவி கர்ப்பமாக இருந்த விஷயம் வார்டன் செண்பகவள்ளி (35) மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் (51) ஆகியோருக்கு ஏற்கனவே தெரிந்தும் பெற்றோரிடம் அதனை மறைத்துள்ளனர்.
மேலும் அது குறித்து போலீசாருக்கோ குழந்தைகள் ஆணையத்துக்கோ தெரிவிக்கவில்லை.
தலைமை ஆசிரியர் கைது

இதையடுத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக தலைமை ஆசிரியர் குமரகுருபரன் மற்றும் செண்பகவள்ளியை விசாரணைக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். கைதான தலைமை ஆசிரியர் குமரகுருபரன் திண்டிவனத்தை சேர்ந்தவராவார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். தன்னை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் அவமானம் தாங்காமல் மாணவி விஷம் குடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை பார்த்து மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அங்கிருந்தவர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!