கொரோனா பரிசோதனையை இப்படி செய்தால் துல்லியம்- ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள்!

எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படும் கொரோனா பரிசோதனை 98 சதவீதம் துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலமாகவே இதன் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.ஏ. துரித பரிசோதனை முறைகள் என பல வகைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் எக்ஸ்ரேவை பயன்படுத்தியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதை கண்டறியும் வழியை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு நபருக்கு வைரஸ் இருப்பதை கணிக்க செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படும் கொரோனா பரிசோதனை 98 சதவீதம் துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெஸ்ட் ஸ்காட்லாந்து பல்கலைக் கழக விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:-

பி.சி.ஆர். சோதனையை விட எக்ஸ்ரே சோதனை வேகமாக இருக்கும். கொரோனாவை கண்டறிய விரைவான மற்றும் நம்பகமான கருவிகளின் தேவை நீண்டகாலமாக உள்ளது.

கொரோனா நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள் மற்றும் நிமோனியா உள்ளவர்கள் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 3,000 படங்களின் ஸ்கேன்களை ஒப்பிடுவதற்கு எக்ஸ்ரே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும் நோய் தொற்றின் ஆரம்ப கட்டங்களில் எக்ஸ்ரேவில் கொரோனா அறிகுறிகள் தெரியவில்லை. எனவே பி.சி.ஆர். சோதனைகளை முழுமையாக மாற்ற முடியாது. எங்களது ஆய்வை விரிவுபடுத்த திட்ட மிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!