மனைவி கண் எதிரே கிணற்றில் மூழ்கிய விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்!

மனைவி கண் எதிரே கிணற்றில் மூழ்கி விவசாயி பலியானார். கிணற்றுக்குள் கயிற்றை வீசியும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

விவசாயி
மேச்சேரி அருகே பெரிய சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயியான இவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் மின்மோட்டார் மூலம் முருகன் விவசாயம் செய்து வருகிறார்.


மின்மோட்டார் வைத்து இருக்கும் இடம் சேதமடைந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த இடத்தை பராமரிப்பு செய்வது தொடர்பாக கிணற்றுக்கு அருகில் நின்று முருகன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.


மனைவி கண் எதிரே…
திடீரென கால் தவறி முருகன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி சுமதி என்ன செய்வது என்று திகைத்தார். கணவரை காப்பாற்ற வேண்டும் என்று துரிதமாக செயல்பட்டார். அங்கு கிடந்த கயிற்றை எடுத்து கிணற்றுக்குள் வீசினார். அதனை பிடித்துக்கொள்ளுங்கள் என்று கணவரிடம் சத்தமாக கூறினார்.


ஆனால் முருகனுக்கு நீச்சல் தெரியாததால் அவர், கயிற்றை பிடிக்காமல் தண்ணீருக்குள் மூழ்கினார். தன்னுடைய கண் எதிரே கணவர் மூழ்கியதை கண்டும், தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்றும் சுமதி கதறி அழுதார்.

உடல் மீட்பு
அவரது கதறல் சத்தம் அந்த பகுதி முழுவதும் கேட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுபற்றி நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்தனர்.


அதன்படி கிணற்று மோட்டார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கொண்டு மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினார். பாதி கிணறு தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் மூழ்கி முருகன் உடலை தேடினர். கிணற்றுக்குள் கிடந்த முருகன் உடலை மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு முருகன் உடல் மீட்கப்பட்டது.


சோகம்
இறந்த விவசாயிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மனைவி கண் எதிரே விவசாயி கிணற்றுக்குள் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!