சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வழிபாடு!

வேடசந்தூரில் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவி நாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று நிலாப்பெண் வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியை தேர்வு செய்து அவரை இரவு முழுவதும் நிலாப்பெண் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.

அந்த சிறுமியை நிலவுக்கு மனைவியாக நினைத்து அலங்காரம் செய்து மற்ற சிறுமிகள் ஒன்று கூடி அம்மன் கோவிலில் வழிபட்டு அதிகாலை நேரம் கலைந்து செல்வது ஒவ்வொரு தைமாத பவுர்ணமி அன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் விஸ்வநாதன்-விசாலாட்சி தம்பதியின் 11 வயது மகள் பிரதிக்ஷா என்பவர் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். அவரை அங்குள்ள மாடச்சியம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க சரளை மேடு பகுதிக்கு பெண்கள் அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு ஆவாரம்பூ மாலையிட்டு அவாரம்பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து ஆட்டம்பாட்டத்துடன் அழைத்து வந்தனர். மாரியம்மன் கோவில் முன்பு சிறுமியை அமர வைத்து பெண்கள் பாட்டுப்பாடி, கும்மியடித்து மகிழ்ந்தனர்.

பின்னர் விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் மாடச்சியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது தாய்மாமன் கட்டிய தென்னங்கீற்று குடிசையில் அமர வைத்து மீண்டும் கும்மியடித்து பாட்டுப்பாடினர்.

இரவு முழுவதும் சிறுமிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு நிலா பெண்ணாக பாவித்து இந்த வினோத திருவிழாவில் ஈடுபட்டனர். அதிகாலை நிலா மறைய தொடங்கும் சமயத்தில் சிறுமி கொண்டு வந்த ஆவாரம்பூ கூடையில் தீபச்சட்டியை வைத்து தீபம் ஏற்றி அதனை நீர் நிறைந்த கிணற்றில் மிதக்க விட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அம்மனை வணங்கி வீடு திரும்பினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் தை மாதம் பவுர்ணமி நாள் அன்று இந்த கிராமத்தில் நிலா பெண் திருவிழா நடைபெற்று வருகிறது. 2 முறை தேர்வு செய்யப்பட்ட சிறுமியை மீண்டும் தேர்வு செய்வது கிடையாது. ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைத்து குடும்பத்தில் உள்ள சிறுமிகளும் இதில் கலந்து கொள்வார்கள். அனைவரது வீடுகளில் இருந்து கொண்டு வரும் உணவு நிலா பெண்ணுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மழை வளம் பெருகுவதோடு, நோய் நொடியின்றி மக்கள் வாழ வழிவகை பிறக்கும். இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவு சிறுமிகள் மற்றும் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டோம். இந்த கொரோனா பிடியில் இருந்து மக்கள் விரைவில் நலம்பெறவும் பிரார்த்தனை செய்து கொண்டோம் என்று தெரிவித்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!