போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் விபரீதமுடிவு!

ஆண்டிமடம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயள்ள கோவில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் புவியரசு (வயது 19), டிரைவர். இவரது நண்பர் அருள்.

பொங்கல் விழாவையொட்டி அருள் வீட்டில் இருந்த டிராக்டருக்கு பூஜை போடப்பட்டது. பின்ன அந்த டிராக்டரை புவியரசு ஓட்டினார். அருகில் அருள் அமர்ந்திருந்தார்.

சிறிது தூரம் சென்றபோது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி அருகே இருந்த பால் சொசைட்டிக்குள் புகுந்தது.

அப்போது அங்கு அங்கு பால் வாங்க வந்திருந்த 2 பெண்கள் மீதும் டிராக்டர் மோதியது. மேலும் டிராக்டரில் அமர்ந்து இருந்த அருளும் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் 2 பெண்களும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய புவியரசை விசாரணைக்காக அழைத்ததாக தெரிகிறது.

போலீசாரின் விசாரணைக்கு பயந்த புவியரசு, தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!