‘என்ர வீட்டை காணோம்’ என மகளுடன் தாய் போராட்டம்- போலீசார் விசாரணை!

மார்த்தாண்டம் அருகே சினிமா பாணியில் குடியிருந்த வீட்டை காணோம் என கூறி மகளுடன் தாய் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் வடிவேலு ஒரு சினிமா படத்தில், தனது நிலத்தில் இருந்த கிணற்றை காணவில்லை என போலீசாரிடம் முறையிடும் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தநிலையில் அதே பாணியில், மார்த்தாண்டம் அருகே வீட்டை காணோம் என கூறி மகளுடன் தாய் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மார்த்தாண்டம் அருகே உள்ள புளியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் லபிலாபல்ஸ் (வயது 60). இவருடைய மனைவி தெரசா (60). இவர்களுக்கு ஜெனிபர் என்ற மகள் உள்ளார்.

லபிலாபல்ஸ் புளியவிளாகத்தில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். அங்கு வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் லபிலாபல்ஸ் திடீரென மாரடைப்பின் காரணமாக இறந்து போனார். அதன் பிறகு வீட்டு வாடகை செலுத்த முடியாமல் வறுமையில் தெரசா தவித்தார்.

இதனால் சொந்த ஊரில் உள்ள வீட்டில் தங்கி வாழலாம் என தெரசா முடிவு செய்தார். அதன்படி தெரசா, மகளுடன் புளியவிளாகத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவர்கள் குடியிருந்த வீட்டை காணவில்லை.

அவரது வீடு இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போடப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் உறவினர் ஒருவர் வீடு கட்டுவது தெரிய வந்தது.

பின்னர் மகள் ஜெனிபருடன் தெரசா தனது வீட்டை காணவில்லை என கூறி திடீரென அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து தெரசாவும், ஜெனிபரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!