2 தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

நெல்லை அருகே இரண்டு தலையுடன் கன்றுக்குட்டி பிறந்ததை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசயமாக பார்த்து வருகிறார்கள்.

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் அடுத்த அணைதலையூர் மரக்குடியை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார்கள்.

அதில் இன்று காலை ஒரு பசு மாடு மிகவும் சிரமப்பட்டு பசுங்கன்று ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தலை இருந்தது. இதனால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இரண்டு தலையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருந்தது. இதனால் இரண்டு தலைகளிலும் இரண்டு காதுகள் மட்டுமே இருந்தது. ஆனால் நான்கு கண்கள், இரண்டு வாய், இரண்டு மூக்குகள் என்று இருந்தது. ஆனால் ஒரே உடலுடன் நான்கு கால்கள் மட்டுமே இருந்தது.

வழக்கமாக இதுபோல் 2 தலையுடன் கன்று குட்டிகள் பிறந்தால், சிறிது நேரத்தில் இறந்து விடும் என்பார்கள். ஆனால் இந்த கன்றுக்குட்டி நன்றாக உள்ளது. முதலில் அந்த கன்று குட்டி எழுந்து நடக்க சிரமப்பட்டது. மாட்டு உரிமையாளர்கள் கன்றுக்குட்டியை எழுந்து நடக்க பழக்கினார்கள். இதைத்தொடர்ந்து அந்த கன்று குட்டி எழுந்து பால் குடிக்க முயற்சி செய்து வருகிறது. இரண்டு வாய் இருப்பதால் பால் குடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இரண்டு தலையுடன் கன்றுக்குட்டி பிறந்ததை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் முருகன் வீட்டிற்கு கூட்டம் கூட்டமாக சென்று அதிசயமாக பார்த்து வருகிறார்கள்.

பலர் இந்த கன்றுக்குட்டியை தங்கள் செல்போனில் படமெடுத்தும், வீடியோ எடுத்தும் அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த 2 தலை கன்றுகுட்டி படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!