தள்ளிப் போகாதே திரைவிமர்சனம்!

நடிகர் அதர்வா முரளி
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
இயக்குனர் கண்ணன் ஆர்.
இசை கோபி சுந்தர்
ஓளிப்பதிவு சண்முக சுந்தரம்


அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் சில நாட்களில் அனுபமாவிற்கு அமிதாஷுடன் திருமணம் நடக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு அதர்வாவும், அனுபமாவும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அனுபமாவிடம் அதர்வா கூற, அதற்கு அவர் மறுக்க, இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் அனுபமா வீட்டிற்கு 10 நாட்கள் தங்க முடிவு செய்கிறார் அதர்வா. அதற்கு அனுபமா கணவர் அமிதாஷும் சம்மதிக்கிறார். தன் மீதான காதலை மறக்க முடியாமல் அனுபமா இருக்கிறார் எனத் தெரிந்தால் தன்னுடன் வர வேண்டும் என அதர்வா அனுபமாவிற்கு சவால் விடுக்கிறார். இந்த சவாலில் அதர்வா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுபமா, அதர்வாவைக் காதலிக்கும் போது ரசிக்க வைக்கிறார். காதலனா, கணவனா என இருவருக்கும் இடையில் தவிக்கும் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார். அனுபமாவின் கணவராக வரும் அமிதாஷ் பிரதான் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த ‘நின்னுக்கோரி’ என்ற வெற்றிப் படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். இவர் இதற்குமுன் இயக்கிய ரீமேக் படங்கள் ஓரளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால், இந்த படம் சற்று ஏமாற்றம் தான். சில காட்சிகள் வேண்டும் என்றே திணித்தது போல் இருந்தது.

கோபி சுந்தர் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சண்முக சுந்தராமின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘தள்ளிப் போகாதே’ தள்ளாட்டம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!