ஏமன் அதிபர் மாளிகை சுற்றிவளைப்பு – அகமது ஒபைது பின் டாகார் தப்பியோட்டம்..!


ஏமன் நாட்டில் அதிபர் அபெத் ராப்போ மன்சூர் ஹாதி ஆதரவு ராணுவத்துக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

ஏடன் நகரத்தில் இருதரப்பு மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இரு தரப்பினரும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி சண்டை போட்டு வருகிறார்கள்.

தெற்கு ஏமனுக்கு சுதந்திரம் கோருகிற பிரிவினைவாத குழு, கடந்த 21-ந் தேதி ஏடன் நகரில் உள்ள அரசு கட்டிடங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில், ஏடனில் உள்ள அதிபர் மாளிகையை பிரிவினைவாதிகள் பிடித்து விட்டனர். அதிபர் மாளிகைதான் சர்வதேச ஆதரவினை பெற்ற ஏமன் அரசின் தலைமையிடமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அதை பிரிவினைவாதிகள் பிடித்திருப்பது, ஏமன் அரசுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமர் அகமது ஒபைது பின் டாகார் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

இதற்கிடையே அங்கு ஷாப்வா மாகாணத்தின் தலைநகரான அட்டாக் நகரின் அருகேயுள்ள ஒரு சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

முதலில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் சோதனைச்சாவடி மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!