ஒரு பிளாட் வீடும்.. மாதம் பணமும் தருகிறேன் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது சிறுமி புகார்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மீதான புகார் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. சுழற்பந்துவீச்சாளரான இவர் 2014-ல் அறிமுகமாகி 46 டெஸ்ட்களில் 235 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.

மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 50, 100, 200 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனையும் யாசிர் படைத்திருக்கிறார்.இந்நிலையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயதாகும் சிறுமி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

சிறுமி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார்.

பர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார்.

நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனவும் அவருக்கு மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார். உயர் அதிகாரிகளையும் நன்றாக தெரியும் என அவர் தெரிவித்தார்.எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என அவரும் என்னை மிரட்டினார்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் யாசிர் ஷா மற்றும் அவரது நண்பர் பர்ஹான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷாலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.

இதனிடையே போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை தொடர்பு கொண்டு உனக்கு ஒரு பிளாட் வீடும், மாதம் மாதம் பணமும் தருவதாக கூறினார் என சிறுமி தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான புகார் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!