சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் செல்பி – 17 வயது சிறுவன் தாய் கைது!

காதல் திருமணம் செய்த சகோதரியை, சிறுவன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் துண்டிக்கப்பட்ட தலையுடன் சிறுவனும் அவனது தாயும் செல்பி எடுத்துள்ளனர். போலீசார் மொபைல் போனை கைப்பற்றி அந்த செல்பியை நீக்கிவிட்டு பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிறுவனையும் அவனது தாயையும் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொலையை செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடியுள்ளார். தன்னுடைய காதலனான 20 வயது இளைஞர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர், தன்னுடைய கணவருடன் லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே அவர்கள் இருவரும் சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் இருவருக்காகவும் அந்தப் பெண் சமையலறையில் டீ போட்டுக் கொண்டு இருக்கும் போது, பின்புறாக சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளான். அதன் பிறகு தாயும் மகனுமாக சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். ஆனால் அவர் தப்பித்துள்ளார். கொலை செய்யப்பட்ட இளம்பெண் கர்ப்பமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!