கராத்தே மாஸ்டரை மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி தாக்கிய கும்பல்!

பாலியல் புகார் வழக்கில் சிக்கிய கராத்தே மாஸ்டரை மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி தாக்கிய 8 பேர் கொண்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. கராத்தே மாஸ்டரான இவர் கருமந்துறை தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராஜா மீது புகார் எழுந்தது. இதுபற்றி மாணவி கொடுத்த புகாரின் பேரில் கராத்தே மாஸ்டர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோரை கருமந்துறை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த கராத்தே மாஸ்டர் ராஜாவை ஒரு கும்பல் கடத்தி சென்று பணம் பறித்ததும், மேலும் பணம் கேட்டு கொடுக்காததால் அவரை தாக்கியதும், தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று செல்போனில் தொடர்பு கொண்ட கும்பல் தங்களுக்கு 200 இட்லி, 200 தோசை வேண்டும். ஆர்டரின் பேரில் எங்களுக்கு செய்து கொடுங்கள் என செல்போன் மூலம் கூறியுள்ளனர்.

பின்னர் அவரை புத்திரகவுண்டம்பாளையம் வாரச்சந்தை அருகே வரச்சொன்ன கும்பல் டிபன் பார்சலை பெற்றுக்கொண்டு ராஜாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி உள்ளனர். பின்பு வெள்ளிமலை பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் பலத்த காயமடைந்த அவரை கருமந்துறை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அதன் பின்னரே கருமந்துறை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தன்னை தாக்கிய 8 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே மாஸ்டர் ராஜா மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்.

அதன் பேரில் அந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!