வரதட்சணை கொடுமை… விழுப்புரத்தில் இளம்பெண் விபரீத முடிவு.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி(30) என்பவருக்கும் செஞ்சி அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த அபிதா(24) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாகவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அபிதா தன்னுடைய தாய் வீடான ஆனத்தூர் கிராமத்திற்கு சென்று நேற்று முன்தினம் தனது கணவர் தட்சணாமூர்த்தி வீடான ஆலம்பூண்டி கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அபிதாவின் வீட்டிற்கு தொடர்பு கொண்ட தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர், அபிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிதா குடும்பத்தினர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மேலும், தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கொடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சத்தியமங்கலம் போலீசார், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்காக பெண்ணின் உடல் நேற்று ஒரு நாள் முழுவதும் உடற்கூறு ஆய்வு செய்யாமல் செஞ்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அபிதாவின் உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் இளம் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை அடுத்து திண்டிவனம் கோட்டாட்சியர் அமீத் செஞ்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண் அபிதாவின் உடலை மருத்துவக் குழுவினர் களுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் அபிதாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அபிதாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் சத்தியமங்கலம் காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!