ஆப்பிளின் 2018 ஐபோன்களில் புது வடிவிலான பேட்டரி…!


ஆப்பிளின் 2018 ஐபோன்களில் புது வடிவிலான பேட்டரி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன்கள் சார்ந்த தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வலம் வரத்துவங்கியுள்ளன.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2018 ஐபோன்களில் எல்-வடிவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. முழுமையாக வளையும் தன்மை கொண்ட L-வடிவிலான பேட்டரிகளை தனது புதிய ஐபோன் X மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் புதிய ஐபோனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய ஐபோன் X-ஐ விட புதிய ஐபோனில் பெரிய பேட்டரி வழங்கப்படலாம்.


தற்போதைய ஐபோன் X மாடலில் இரண்டு செவ்வக பேட்டரிகளை L-வடிவில் வழங்கி இருக்கிறது. இதில் 2716 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2675 எம்.ஏ.ஹெச். சிங்கிள்-செல் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இத்துடன் புதிய ஐபோன்களில் வழங்க வேண்டிய OLED பேனல்களை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2018 ஐபோன்களில் பயன்படுத்தப்பட இருக்கும் 6.45 இன்ச் ஸ்கிரீன்களை எல்.ஜி. நிறுவனம் விநியோகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தி இன்வெஸ்டர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எல்ஜி செம் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் L-வடிவிலான பேட்டரிகளை தயாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நான்ஜிங் பகுதியில் எல்.ஜி. நிறுவனம் கட்டமைத்திருக்கும் புதிய தயாரிப்பு ஆலையில் ஐபோன்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க எல்.ஜி. திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!