பிரபல பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் விபத்தில் பலி…!


ஓசூர் அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் பெங்களுருவை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கங்கா நகரில் லட்சுமி ஆஸ்பத்திரி என்ற பெயரில் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் அம்புஜம் (வயது 63) மருத்துவமனை நடத்தி வந்தார். இவரது கணவர் ராமச்சந்திரன் (70).

கணவன்-மனைவி இருவரும் குருவாயூர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காரில் பெங்களூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.அந்த காரை பெங்களூருவை சேர்ந்த பைசூன் (37) என்பவர் ஓட்டினார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கொள்ளப்பள்ளி என்ற இடத்தில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் டாக்டர் அம்புஜம், அவரது கணவர் ராமச்சந்திரன், டிரைவர் பைசூன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெங்களூரு கங்கா நகரில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விபத்தில் பலியான டாக் டர் அம்புஜம் சொந்த ஊர் கேரள மாநிலம் தலைச்சேரி ஆகும்.

இவரது கணவர் ராமச்சந்திரன் பிரபல தனியார் நிறுவனமான எல் அண்ட்டியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கோவையாகும். கணவன்-மனைவி இருவரும் கடந்த 1980-ம் ஆண்டு பெங்களூரு வந்து ஆஸ்பத்திரி நடத்தி வந்தனர்.

இவர்களது மகன்கள் ஸ்ரீராம் ராமச்சந்திரன் மற்றும் வி.ஆர். ராஜன் ஆகியோரும் டாக்டருக்கு படித்து தாயார் நடத்தி வரும் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகின்றனர்.

விபத்தில் இறந்து போன டிரைவர் பைசூனின் சொந்த ஊர் கேரளா மாநிலம் அடூர் ஆகும். இவரும், ஆஸ்பத்திரியில் டிரைவராக பணியாற்றினார். இவரது மனைவி ஜிஞ்சுவும் இதே ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!