பாலியல் புகார் கூறி மாயமான டென்னிஸ் வீராங்கனை பெயரில் இ-மெயில்!

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு தலைவர் மீது பாலியல் புகார் கூறியபின் மாயமான டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் பெயரில் இ-மெயில் வெளிவந்துள்ளது. இதில் மகளிர் டென்னிஸ் சங்கம் சந்தேகம் எழுப்புகிறது.

உலகின் மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர், சீனாவின் பெங் சூவாய் (வயது 35).

நம்பர்-1 முன்னாள் வீராங்கனையான இவர் 2013-ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம், 2014-ல் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை தைவானின் ஹசீ சூ வெய்யுடன் சேர்ந்து வென்றுள்ளார்.

இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி பற்றி சமூக ஊடகம் ஒன்றில் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.

அந்தப்புகாரில் அவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாங் கோலி அவரை தனது இல்லத்துக்கு அழைத்து தன்னுடன் டென்னிஸ் விளையாடி விட்டு, பின்னர் படுக்கை அறைக்கும் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

இந்த ஜாங் கோலி, தற்போதைய அதிபர் ஜின்பிங்குடன் மிக நெருக்கமாக இருந்தவர் என தெரிகிறது.

இந்த குற்றச்சாட்டை பெங் சூவாய் வெளியிட்ட நாள் முதல் அவர் மாயமானார். பொது வெளியில் அவர் தோன்றவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

அவரை மகளிர் டென்னிஸ் சங்கம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.

இந்தநிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெங் சூவாய் பெயரில் மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யு.டி.ஏ.யின் தலைவர் ஸ்டீவ் சைமனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம் சி.ஜி.டி.என். டிவி சேனல் வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இ-மெயிலில் அவர், “நான் காணாமல் போகவில்லை, பத்திரமாக இருக்கிறேன், வீட்டில் ஓய்வில் உள்ளேன், எல்லாமே நன்றாக இருக்கிறது” என்று கூறுவது அவரது குரலில் பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த இ-மெயில் மீது மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யு.டி.ஏ.யின் தலைவர் ஸ்டீவ் சைமன் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘வெளியாகி உள்ள இ-மெயில் பெங் சூவாய் எழுதியதுதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதை நம்புவது கடினமாக உள்ளது. அவருடைய பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் பற்றிய கவலையை எழுப்புகிறது. மகளிர் டென்னிஸ் சங்கமும், உலகமும் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிய சுதந்திரமான, சரிபார்க்கக்கூடிய ஆதாரம் தேவை. அவர் கூறியுள்ள செக்ஸ் புகார் மீது முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை தேவை. பெண்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும், மதிக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.

இது சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!