ஓ மணப்பெண்ணே திரைவிமர்சனம்!

நடிகர் ஹரிஷ் கல்யாண்
நடிகை பிரியா பவானி சங்கர்
இயக்குனர் கார்த்திக் சுந்தர்
இசை விஷால் சந்திரசேகர்
ஓளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த்


இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண், ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார். முதலீடு தேவை என்பதால் திருமணம் செய்துக் கொண்டு, வரதட்சணையை வைத்து செட்டிலாகி விடலாம் என்று நாயகி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கிறார்.

அப்போது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர். அந்த அறையின் கதவை திறக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இருவரும் அங்கேயே அமர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசிக்கொள்கின்றனர். அதில் இருவருக்குமே தங்களை பற்றியும் தங்கள் முன்னாள் காதல் முறிந்தது, தங்களின் வாழ்க்கையின் லட்சியம் என்ன போன்றவற்றை பரிமாறிக் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தவறுதலாக வீடு மாறி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க வந்த விஷயம் ஹரிஷ் கல்யாணுக்கு தெரிய வருகிறது. இறுதியில், அவர் பார்க்க வேண்டிய பெண்ணை தேடி சென்றாரா? பிரியா பவானி சங்கரை திருமணம் செய்தாரா? ஓட்டல் வைத்து செட்டிலாகும் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அஸ்வின். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பெல்லி சுப்பலு என்ற படத்தை தமிழ் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர். இந்த காலத்திலும் ஜோதிடம் சாஸ்திரம் போன்றவற்றை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ். மேலும், வரதட்சணை குறித்தும் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரைக்கதை ஓட்டத்திற்கு இவர்களின் பங்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ அழகான பெண்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!