ஆடம்பர மாளிகை வாங்கிய ஆப்கான் ராணுவ மந்திரியின் மகன்.. இத்தனை கோடியா..?

ஆப்கானிஸ்தான் மக்கள் தலீபான்களின் ஆட்சியில் வறுமையில் வாடி வரும் நிலையில் ஆப்கான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன் அமெரிக்காவில் ரூ.157 கோடிக்கு ஆடம்பர மாளிகை வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஆப்கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அங்கிருந்து வெளியேறின.

இதை தங்களுக்கு சதகமாக்கிக்கொண்ட தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள்வசமாக்கினர்.

மூட்டை மூட்டையாக பணத்துடன்

தலீபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எந்த கவலையும் இன்றி அதிபர் அஷ்ரப் கனி மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக் கொண்டு தனது மனைவியுடன் அண்டை நாட்டுக்கு தப்பி ஓடினார்.

4 கார்களில் எடுத்து வந்த பணத்தை ஹெலிகாப்டர் முழுவதும் நிரப்பிய பின்னரும் ஏராளமான பணம் மிஞ்சியிருந்தாகவும், அதை அவர் சாலையில் வீசி சென்றதாகவும் அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

மந்திரிகளும், அதிகாரிகளும் வெளியேறினர்

அதிபரை போலவே மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், மூத்த அரசு அதிகாரிகள் என பலரும் தாங்கள் இது நாள்வரை சேர்த்து வைத்திருந்த பணம், நகை உள்ளிட்ட அசை யும் சொத்துகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறினர்.

2 கோடிக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் தலீபான்களின் ஆட்சியில் வறுமையையும் அடுக்குமுறையையும் எதிர்கொண்டு வரும் வேளையில் அவர்களுக்கு சேவை செய்வதாக கூறி பதவிக்கு வந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தோடு அயல்நாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

ரூ.157 கோடிக்கு ஆடம்பர மாளிகை

இதை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக ஆப்கான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன் அமெரிக்காவில் ரூ.157 கோடிக்கு ஆடம்பர மாளிகையை வாங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ மந்திரியான அப்துல் ரஹீம் வர்தாக்கின் மகன் தவூத் வர்தாக். 45 வயதான இவர்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் 20.9 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.157 கோடியே 43 லட்சத்து 86 ஆயிரம்) கொடுத்து ஆடம்பர மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார்.

மூத்த மகன் பெரிய தொழிலதிபர்

9 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில் 5 படுக்கையறைகள், 7 குளியலறைகள், நீச்சல் குளம், மாளிகை முழுவதும் கண்ணாடி சுவர்கள் என சகல வசதிகளும் உள்ளன.

ஏற்கனவே இவருக்கு மியாமி கடற்கரைக்கு அருகே 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.39 கோடி) மதிப்புடைய சொகுசு பங்களா சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தவூத் வர்தாக்கின் மூத்த சகோதரரான ஹமீத் வர்தாக் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பதாகவும், அவர் ராணுவ போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!