சென்னையில் தான் எனது கடைசி போட்டி நடக்கும்- டோனி!

ஓய்வுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நடிப்பு என்பது எளிதானது அல்ல என்றும் ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருப்பேன் என்றும் டோனி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி 2 உலக கோப்பையை (2007-ல் 20 ஓவர் மற்றும் 2011-ல் ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தார்.

40 வயதான டோனி கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2019-ம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதி அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த ஐ.பி.எல்.லில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்தநிலையில் டோனி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியோடு ஓய்வு பெறவில்லை. அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லிலும் விளையாடுகிறார். சென்னையில் விளையாடுவதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று டோனி தெரிவித்து உள்ளார்.

சென்னை அணி வீரர்கள்

இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி ஆன்லைன் வழியாக டோனி ரசிகர்களுடன் உரையாடிய போது இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்பை சொல்ல சுதந்திர தினத்தைவிட சிறந்த ஒரு நாள் இருக்காது என எண்ணி அதை செய்தேன்.

அதேநேரத்தில் எனக்கான பிரிவு உபச்சார போட்டியாக (ஃபேர்வெல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் அமைய வாய்ப்பு உள்ளது. அதைவிட சிறந்ததொரு ஃபேர்வெல் எனக்கு இருக்க முடியாது.

இவ்வாறு டோனி கூறினார்.

ஓய்வுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நடிப்பு என்பது எளிதானது அல்ல. ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!