காபூல் பல்கலை கழகத்தில் 70 பேராசிரியர்கள் ராஜினாமா!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான போரில் ஆட்சியை தலீபான்கள் அமைப்பு கைப்பற்றி உள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். அந்நாட்டில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள மிக பெரிய காபூல் பல்கலை கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் முகமது உஸ்மான் பாபுரி. பிஎச்.டி. முடித்தவர். அனுபவம் வாய்ந்தவர். இந்த நிலையில், தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அவரை நீக்கி விட்டு, பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள முகமது அஷ்ரப் கைராத் என்பவரை அந்த பதவிக்கு நியமித்து உள்ளனர்.

இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு, பத்திரிகையாளர்கள் கொலையை நியாயப்படுத்தி, கைராத் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனை விமர்சகர்கள் சுட்டி காட்டி விமர்சித்து வருகின்றனர்.

இந்த நியமனத்திற்கு தலீபான் உறுப்பினர்களில் சிலரும் கூட தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அந்த பல்கலை கழகத்தில் பணியாற்றி வந்த துணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மொத்தம் 70 பேராசிரியர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!