கணவர் செலவுக்கு பணம் தராவிட்டால்..!

குடும்பத்தில் இருக்கும்போது தங்கள் தேவைக்கான செலவை கேட்டுப் பெற முடியாமலும், கேட்டும் கிடைக்காமலும் வாழும் பெண்கள் அதிகம்.


பொறுப்பான இல்லத்தரசியாக வீட்டின் வரவு செலவுத் திட்டங்களை நீங்கள் தயார் செய்திருப்பீர்கள். சொந்த வீடு மற்றும் இ.எம்.ஐ., வீட்டுக்குத் தேவையான பொருட்கள், புதிய வாகனம் வாங்கலாமா? பிள்ளைகளின் கல்விச் செலவு போன்றவை அனைத்தும் உங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். ஆனால் பட்ஜெட்டில் உங்கள் தேவைக்கென சிறு தொகையையாவது ஒதுக்கியிருக்கிறீர்களா?

வேலைக்குச் செல்லும் பெண் என்றால் உங்களால் ஒரு தொகையை கேட்டுப் பெற முடியலாம். ஆனால் இல்லத்தரசியாக இருப்பவர்களுக்கு ஒரு தொகையை செலவுக்காக ஒதுக்கினால் பல குடும்பங்களில் பூகம்பங்கள் வெடிக்கும். ஆனால் பெண்ணுக்கென்று அவசியமான செலவுகள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட கணவன்மார்கள் வெகுசிலரே. உங்களுக்கான அவசிய செலவை கணவரிடம் கேட்டுப்பெறுவதும், அதற்கான செலவை பட்ஜெட்டில் சேர்ப்பதும் உங்கள் உரிமையும், கடமையுமாகும்.

டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது உங்கள் நினைவில் இருக்கலாம். ‘பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3500 வழங்க முடியாது’ என்று கணவர் ஒருவர் முறையீடு செய்தபோது, அவரது வழக்கை தள்ளுபடி செய்து ‘அந்தத் தொகை குறைவானதுதான், கண்டிப்பாக அதை வழங்கியாக வேண்டும்’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கணவரை பிரிந்து வாழும் பெண்கள் கூட, ஜீவனாம்சமாக தங்கள் உரிமையை கேட்டுப் பெற முடியும். ஆனால் குடும்பத்தில் இருக்கும்போது தங்கள் தேவைக்கான செலவை கேட்டுப் பெற முடியாமலும், கேட்டும் கிடைக்காமலும் வாழும் பெண்கள் அதிகம்.

வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்களுக்கு என்ன செலவு வரப்போகிறது? என்று ஆண்கள் மேலோட்டமாக கேள்வி கேட்டுவிடுவது உண்டு. அது ஆடம்பர செலவு என்று கணவர் வீட்டாரும் குறைகூற வாய்ப்பு உண்டு.

ஆனால் பெண்களுக்கேயான பிரச்சினைகள் நிறைய உள்ளன. பருவகால பிரச்சினைகள், நோய்கள், மாதவிடாய் கால சிக்கல்கள், உடல் எடை தொந்தரவு, பிரத்யேக உணவுகளுக்கான தேவை, சரும பிரச்சினை, பிள்ளைப் பேறுக்காக காத்திருந்தால் அதற்கான சிறப்பு கவனிப்புக்கான செலவுகள், வேலைக்குச் சென்று வந்தால் பயணச் செலவு, உடைகளை பராமரிப்பதற்கான செலவு, திடீர் விருந்தினரை உபசரிப்பதற்கான அவசர கையிருப்பு என பெண்களுக்கான செலவுகள் நீண்டு கொண்டே செல்லும். மேலும், வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தாலோ, மகள்கள் பெரியவர்களாக இருந்தாலோ இந்தச் செலவு இன்னும் இரட்டிப்பாகும். வேலைக்குச் செல்லும் பெண்களால்தான், தங்களுக்கு பணம் தேவை என்பதை வற்புறுத்தி பெற முடிகிறது. மற்றவர்கள் போராடி பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சராசரி மாத சம்பளம் பெறுபவர்கள் வீட்டில்தான் இந்த நிலைமை என்பதில்லை. ஆண்கள் அதிகம் சம்பாதிக்கும் வீடுகளில் கூட பெண்ணின் செலவை உதாசீனப் படுத்துவது உண்டு. “வீட்டிலேயே சாப்பாடு கிடைக்கிறது, வெளியே கூட்டிச் சென்று வருகிறோம். இதற்குமேல் உங்களுக்கு என்ன தனிச் செலவு?” என்று கேள்வி எழுப்புவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் பெண்களின் செலவுப் பட்டியலை பொறுமையாக கேட்கும் எண்ணம் கூட இருக்காது. அதற்குள் கடிந்து கொண்டே “நிறைய காசை வீணாக்காதே” என்றுகூறி சொற்ப தொகையை நீட்டி, பெண்களின் வாயை அடைத்துவிடுவார்கள். ஆனால் தேவைக்கு அதிகமாக காசு கொடுக்காத அவர்கள், மாதக் கடைசியில், கையிருப்பு காலியானதும் மனைவிகளை தாஜா செய்து, “ஏதாவது மிச்சம்பிடிச்சு வச்சிருக்கியா?” என்று கேட்பதுதான் வேடிக்கை.

நிச்சயம் வீட்டுப் பட்ஜெட்டில் பெண்களுக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்பட வேண்டும். அதை கணவருக்கு விளக்க வேண்டியது அவசியம். வீட்டின் சாப்பாட்டு செலவு, வாடகை, வாகனங்களுக்கான பராமரிப்பு, வீட்டிற்கான இ.எம்.ஐ., பிள்ளைகளின் படிப்புச் செலவு, பயணச் செலவு என எல்லாவற்றையும் பட்டியலிடுவதுபோல, கணவருக்கான செலவுத் தொகையாக கொஞ்சம் ஒதுக்குவதுபோல உங்களுக்கும், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் கொஞ்சம் தொகையை ஒதுக்குங்கள். குறைந்தபட்சம் ஆடம்பர அலங்காரச் செலவுக்கு இல்லாவிட்டாலும், அடிப்படைத் தேவைகளுக்காவது கண்டிப்பாக நிதி ஒதுக்குங்கள். வருவாயில் குறைந்தது 10 சதவீதத்தை அதற்காக ஒதுக்கலாம். செலவுக்கு மட்டுமல்ல, சேமிப்பிற்கும் மாதந்தோறும் பணம் ஒதுக்குங்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!