ராம்குமார் மரணத்தில் சந்தேகம்… மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி (வயது 24), கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்பவரை கைது செய்தனர்.

அப்போது அவர், கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அப்போதைய புழல் ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன் ராம்ராஜ் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி அவர்களது விளக்கத்தை பதிவு செய்தது.

இந்தநிலையில், அந்த வழக்கின் விசாரணை நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர்கள் வேணு ஆனந்த், ஆண்டாள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே விளக்கம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்தது. இதன்பின்பு, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!