வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நடந்த சோகம்..!

வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை வெட்டிக் கொன்று 9½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் வாழவல்லான் மேலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மனைவி முத்துக்கிளி (வயது 75). இவர்களுக்கு 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் கணவன்-மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் முத்துக்கிளி வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்கிளியை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் துடிதுடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவர்கள், முத்துக்கிளி கழுத்தில் அணிந்து இருந்த தாலி சங்கிலி, வளையல், கம்மல் என 9½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழிந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, முத்துக்கிளி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஏரல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முத்துக்கிளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!