கல்யாணம்… ஆணும்-பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!

திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கிறார்கள். திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் முக்கியமானவைதான். ஆனால் அதற்கு பிந்தைய வாழ்க்கை என்பது அதைவிட முக்கியமானது.


திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கிறார்கள். ஜோடிப் பொருத்தம், கல்வி, உத்தியோகம், சொத்து விவரம், குடும்பப் பின்னணி போன்ற பல விஷயங்கள் அலசி ஆராயப்படுகின்றன. ஆனால் திருமணத்திற்கு பிந்தைய தாம்பத்ய உறவு பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அதைப்பற்றி மணமக்களுக்கு விழிப்புணர்வும் கொடுப்பதில்லை. அதன் விளைவால் திருமணத்திற்கு பின்பு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. தம்பதிகள் பிரிகிறார்கள். இத்தகைய விவாகரத்துக்கள் இந்தியாவில்தான் அதிகமாக நடக்கின்றன.

அதனால், ‘பிள்ளைகளின் திருமணத்திற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்கும் பெற்றோர், அவர்களின் எதிர்கால நலன் கருதி ஒரு நல்ல மருத்துவரையும் பார்க்கலாமே!’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருமணம் நடக்கும் முன்பு ஆண்-பெண் இருபாலருமே மருத்துவரை அணுகவேண்டியது காலத்தின் கட்டாயம். அது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஆனால் இந்த முக்கியமான உண்மையை இன்றுவரை பலரும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த உண்மைக்கு மதிப்பு இல்லாமல் போனதால்தான், தாம்பத்ய உறவுக்கே லாயக்கில்லாதவர்கள்கூட தங்கள் குறைகளை மூடி மறைத்து திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. பிறகு உண்மை வெளியே தெரியும்போது இரு குடும்பத்திற்கும் மோதல் உருவாகிறது. தேவையற்ற பல்வேறு பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. அவர்கள் முன்பே மருத்துவரின் ஆலோசனையை கேட்டிருந்தால் வாழ்க்கையை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ‘எப்படியாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும். எது வந்தாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மூர்க்கத்தனமான எண்ணம்தான் இன்றும் மக்கள் மத்தியில் உலவுகிறது.

திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் முக்கியமானவைதான். ஆனால் அதற்கு பிந்தைய வாழ்க்கை என்பது அதைவிட முக்கியமானது. உடல், மன பொருத்தமற்ற திருமணமாக இருந்தாலும் ஆயிரம் சாஸ்திரம் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நடந்தேறிவிடும். அதன்பிறகு சம்பிரதாயங்களை மதித்து நடக்கவேண்டும். இல்லாவிட்டால் சமூக பழிக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சுறுத்தலுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர்கள் அவல வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

‘பிரி மேரிட்டல் கவுன்சலிங்’ எனப்படும் திருமணத்திற்கு முந்தைய பாலியல்- மன- உடல் சார்ந்த ஆலோசனைகள் பெரும்பாலான ஜோடிகளுக்கு வழங்கப் படுவதில்லை. அதைப்பற்றி பேசவே வெட்கப்படுகிறார்கள். வலைத்தளங்களில் பார்க்கும் தாறுமாறான விஷயங்களை அவர்கள் நம்புகிறார்கள். அது வாழ்க்கைக்கு உதவுவதில்லை. இதனால் பல சிக்கல்கள் உருவாகி, தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படும்.

வாழ்க்கைக்கு அவசியமான ஒரு விஷயத்தை இவ்வளவு ரகசியமாக வைத் திருக்க வேண்டிய அவசியமில்லை. திரு மணத்திற்கு முன் மருத்துவரை சந்தித்து தெளிவு நிலையோடு அவர்கள் புது வாழ்க்கையை தொடங்கவேண்டும்.

வலைத்தளங்களில் பார்க்கும் எந்த ஒரு விஷயமும் விஞ்ஞானரீதியான கல்வியாகாது. பல தவறான தகவல்கள் அதன் மூலம் வந்தடைகிறது. அதுதான் உண்மையிலே வாழ்க்கையை தவறான பாதையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. பாலியல் கல்வி வேண்டாம் என்று வாதாடுபவர்கள், தம்பதிகளுக்குள் பிரச்சினை வந்த பின்பு, எந்த டாக்டரை சந்தித்தால் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று ஓடோடிச் செல்கிறார்கள். அப்படியொரு அவலம் ஏற்படாமல் இருக்க திருமணத்திற்கு முன்பே முறையான மருத்துவ பரிசோதனை அவசியம். ஆண்-பெண் இருவரும் கட்டாயம் அதை செய்துகொள்ளவேண்டும். தான் மணம் செய்துகொள்ளப் போகிறவர் திருமண வாழ்க்கைக்கு ஏற்றவர் தானா என்பதை டாக்டர் மூலம் அறிந்துகொள்ள ஆண், பெண் இருவருக்குமே உரிமை இருக்கிறது. அவர்கள் தகுதிக் குரியவர்களாக இல்லாமல் போனால் திரு மணத்தில் இருந்து விலகிக்கொள்ளலாம். அதன் மூலம் வம்பு, வழக்கு, விவாதம், மனஉளைச்சல் இதையெல்லாம் தவிர்க்கலாம். திருமணம் செய்து வைப்பது மட்டும் பெற்றோர் கடமை அல்ல. அதன்பின் வரும் நீண்ட வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்து தருவதும் பெற்றோரின் கடமைதான்.

என் மகள் ஜாதகத்தை தருகிறேன். உன் மகன் ஜாதகத்தைக்கொடு என்று உரிமையோடு கேட்பவர்கள், அதேபோல மருத்துவ பரிசோதனையையும் பரிமாறிக்கொள்ள வேண்டும். இது முறைப்படுத்தப்பட்டால் பல திருமண முறிவுகளை தடுக்கலாம். குறையுள்ள ஒரு பொருளை தரவும் முடியாது. பெறவும் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். திருமணத்திற்கு பின் மணமகளைப் பார்த்து ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்பவர்களுக்கு மணமகனைப் பற்றிய எந்த விஷயமும் தெரிவதில்லை. ஆணோ, பெண்ணோ குறையுள்ளவராக இருக்கும்போது எப்படி ‘விசேஷம்’ உருவாகும். முந்தைய காலத்தில் ஆண், பெண்ணிடம் பாலியல்ரீதியான குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வழியில்லாமல் இருந்தது. அதனால் உண்மைகளை மறைத்து திருமணம் செய்துவைத்தார்கள். இப்போது மருத்துவதுறை வளர்ந்துவிட்டது. பெரும்பாலான குறைகளை சரிசெய்துவிடலாம். அதனால் உண்மைகளை மறைக்கவேண்டியதில்லை. ஒத்துக்கொண்டு நிவர்த்தி செய்திட வாய்ப்பிருக்கிறது.

ஒருவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்று தெரியவரும் போது திரு மணத்தை ரத்து செய்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம். அப்படியானால் தாம்பத்ய உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிந்துகொள்ளுங்கள்.

மணமகனுக்கு குடிப்பழக்கம் உள்ளதா?

சிகரெட் மற்றும் போதைப் பொருள் வழக்கம் உள்ளதா?

ஏதேனும் பால்வினை நோய் உள்ளதா?

தாம்பத்ய உறவுக்கு தகுதியானவர் தானா?

ஏதேனும் நோய் தொற்று உள்ளதா?

மனதளவில் ஆரோக்கியமானவரா?

இதயம் பலவீனமானவரா?

இதற்கு முன் ஏதேனும் பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா?

இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேடி கண்டுபிடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முன்வாருங்கள். அத்தகைய திருமண வாழ்க்கையே வெற்றிகரமாக அமையும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!