கருப்பு பூஞ்சையும்… வாய்வழி சுகாதாரமும்..!

கருப்பு பூஞ்சை நோய் நாக்கையும், பல் ஈறுகளையும் பாதிக்கும். ஈறுகளில் வீக்கத்தை உருவாக்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பின்னர் வாய் வழியாக நுரையீரல் மற்றும் பிற உள் உறுப்புகளுக்கு பரவி உடல் நிலையை மோசமாக்கிவிடும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பலர் இந்த நோய் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களும், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். இது ஒருவகை பூஞ்சை தொற்று என்பதால் வாய்வழி சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது மூக்கு, வாய்வழி திசுக்கள், நாக்கு, பல் ஈறுகள் போன்ற பகுதிகளுக்கு பரவும் தன்மை கொண்டது.

குறிப்பாக கருப்பு பூஞ்சை நோய் நாக்கையும், பல் ஈறுகளையும் பாதிக்கும். ஈறுகளில் வீக்கத்தை உருவாக்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பின்னர் வாய் வழியாக நுரையீரல் மற்றும் பிற உள் உறுப்புகளுக்கு பரவி உடல் நிலையை மோசமாக்கிவிடும். அதனால் வாய்வழி சுகாதாரத்தை பேணுவது அவசியமானது.

தினமும் காலையில் மட்டும் பல் துலக்காமல் தூங்க செல்வதற்கு முன்பும் பல் துலக்குவது நல்லது. அப்படி இரவில் பல் துலக்குவது அன்றைய நாள் முழுவதும் வாய்க்குள் நுழையும் கிருமிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். சாப்பிடும்போது மட்டுமல்ல மற்ற சமயங்களில் எது சாப்பிட்டாலும் வாய்க்கொப்பளிக்க மறக்கக் கூடாது. இல்லாவிட்டால் உணவுத்துகள்கள் பல் இடுக்குகளில் படிந்துவிடும். அவை ஈறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

வாயை சுத்தப்படுத்த உதவும் ‘மவுத்வாஷ்’ போன்ற திரவ கிருமி நாசினியை வாய்க்குள் ஊற்றி 30 விநாடிகள் வைத்திருந்து வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்வது பாக்டீரியாக்கள், கிருமிகள் தொற்றை தடுக்க உதவும். உடலில் நீர்ச்சத்தை சீராக பேணுவது சருமத்திற்கு மட்டுமல்ல வாய்வழி ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும். வாயில் பி.எச். அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். பற்களுக்கு இடையில் தங்கியிருக்கும் உணவு துகள்கள், அழுக்குகளை அகற்ற உதவும்.

பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கை சுத்தப்படுத்தும் கிளீனரை குறிப்பிட்ட இடைவெளிக்குள் மாற்றிவிட வேண்டும். குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்கள் புதிய பிரஷ், நாக்கு கிளீனரை உபயோகிக்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தியவற்றை மீண்டும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அது மீண்டும் நோய்த்தொற்றையும், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பையும் உண்டாக்கலாம்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பிரஷ்கள், கிளீனர்களை மொத்தமாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பிரஷ், நாக்கு கிளீனரை தனித்தனியாக வைத்திருப்பதுதான் நல்லது. ஒவ்வொருவரும் தங்கள் அறையில் தனியாக வைத்து பராமரிக்கலாம். நாக்கை சுத்தம் செய்த பிறகு நாக்கு கிளீனரை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துவதும் நல்லது. அப்படி கிருமி நீக்கம் செய்வது பாக்டீரியாக்கள், கிருமிகள் நாக்கு கிளீனரின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதை தவிர்க்க உதவும். பூச்சை தொற்றையும் தவிர்க்க உதவும்.

பற்களில் ஒட்டியிருக்கும் உணவுத்துகள்களை அப்புறப்படுத்துவதற்கு குச்சிகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஈறுகளில் வலியோ, நிற மாற்றமோ ஏற்பட்டால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!