தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது தெரியுமா?

அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினாலே தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம்.


கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெருநகரங்களில் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்குவதால் வழக்கம்போல் தண்ணீர் கிடைக்காது. எல்லா காலங்களிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டிருந்தாலும் கோடை காலத்தில்தான் பலரும் கவனத்தில் கொள்வார்கள்.

அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினாலே தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம். பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வழக்கத்தை எல்லா காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை கழுவுவதற்கு பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு உற்றலாம். அரிசி, பருப்பு போன்றவைகளை கழுவுவதற்கு பயன்படுத்தும் நீரையும் வீட்டு செடிகளுக்கு உபயோகிக்கலாம். குளியலறையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தி இருப்பவர்கள் அதில் இருந்து வீணாகும் தண்ணீரை சேகரித்து வீட்டின் போர்டிகோ உள்ளிட்ட தரை தளங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம்.

பெரும்பாலான வீடுகளில் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர்தான் அதிக அளவில் வீணாகிறது. பல் துலக்குவது, பாத்திரங்கள் கழுவுவது, முகம் கழுவுவது என தண்ணீரை திறந்துகொண்டே வேலை செய்வதுதான் அதற்கு காரணம். பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அப்படி குழாய்களில் இருந்து தினமும் 360 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை குறைக்கும் கருவிகளை பொருத்துவதன் மூலமும் நீரை சேமிக்கலாம்.

கோடை காலங்களில் ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவர் ஐந்து நிமிடங்கள் ஷவரில் குளித்தால் 35 லிட்டர் தண்ணீர் செலவாகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் பக்கெட்டில் நிரப்பி குளித்தால் அதைவிட குறைந்த அளவு நீரே செலவாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!