செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் கால்பந்து வீராங்கனை..!

ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள பசமுடி என்ற கிராமத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட சங்கீதா 18 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் கைகூடவில்லை.

இந்த நிலையில் வீ்ட்டில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டதால் வேறு வழியின்றி மீண்டும் செங்கல் சூளைக்கு தினக்கூலியாக வேலைக்கு செல்கிறார். வேலைக்கு சென்றாலும் நேரம் கிடைக்கும் போது அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடுவதை தவறவிடுவதில்லை. ஒரு சர்வதேச கால்பந்து வீராங்கனை படும் கஷ்டங்களை சுட்டிகாட்டிய பெண்கள் தேசிய ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அவருக்கு உதவும்படி ஜார்கண்ட் மாநில அரசுக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் கடிதம் எழுதினார்.

இதற்கிடையே, இந்த விஷயங்களை கேள்விப்பட்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவருக்கு உதவிகரம் நீட்டுகிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா காலத்தில் சங்கீதா பணமின்றி கஷ்டப்படுவது எனது கவனத்துக்கு வந்துள்ளது. எனது அலுவலகம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. விரைவில் அவருக்கு நிதிஉதவி அளிக்கப்படும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கவுரவமான வாழ்க்கை இருப்பதை உறுதி செய்வதே எங்களது பிரதான நோக்கம்’ என்றார்.

ஜார்கண்ட் மாநில அரசும் அவருக்கு உதவ முன்வந்துள்ளது. சங்கீதாவுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், வருங்காலத்தில் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் அவரது தகுதிக்கு ஏற்ப பயிற்சியாளர் அல்லது உதவியாளர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் ஜார்கண்ட் முதல்-மந்திரியின் அலுவலகம் கூறியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!