அம்மாவின் மறைவால் “அந்த” பழக்கத்துக்கு அடிமையானேன் – ஹாரி உருக்கம்!

தனது தாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்தார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி தங்களது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரி அண்மை காலமாக அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் அரச குடும்பம் பற்றியும் அரச குடும்பத்தில் தனது வாழ்வு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசி வருகிறார்.

தனது தாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தாகவும், ஒரு கட்டத்தில் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக நேர்ந்ததாகவும் ஹாரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் தனது மனைவி மேகன் சமூக ஊடகங்களின் துன்புறுத்தலுக்கு மத்தியில் தற்கொலை எண்ணங்களை கொண்டிருந்தபோது அரச குடும்பம் அவரை முற்றிலும் புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.

இது பற்றி அவர் கூறுகையில் ‘‘நான் முற்றிலும் உதவியற்றவனாக உணர்ந்தேன். எனது குடும்பம் எனக்கு உதவும் என்று நினைத்தேன். என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணி நான் வருந்தினேன். அம்மாவுக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது. ஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கேமிராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன். ஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு கேள்வியும், கோரிக்கையும், எச்சரிக்கையும் அது எதுவாக இருந்தாலும் மொத்த மவுனம் அல்லது மொத்த புறக்கணிப்பை சந்தித்தது” என்று அவர் கூறினார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!