சந்திர தோஷத்தை போக்குவதற்கான பரிகாரங்கள்..!

ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியில்லாத போதோ கோட்சார ரீதியாகவோ கெட்டிருக்கும் போது சந்திர தோஷம் ஏற்படுகிறது. இந்த சந்திர தோஷத்தை போக்குவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


சந்திர பகவான் ஒரு ஜாதகரின் தாய், ஜாதகரின் மனநிலை, ஞாபகத்திறன், வெளிநாட்டு பயணம், திரவம் சம்பந்தமான தொழில்கள் போன்றவற்றிற்கு காரகனாக இருக்கிறார். ஜாதகத்தில் ஒருவருக்கு சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனநிலை கோளாறுகள், தாயுடன் மனஸ்தாபம், நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத்தடை போன்றவை ஏற்படும்.

ஜாதகத்தில் சந்திரன் நிலை சரியில்லாத நிலையில் இருப்பவர்கள், சந்திரனின் கோட்ச்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள் ஒரு திங்கட்கிழமை அன்று ஏதேனும் ஒரு புண்ணிய நதியில் ஒரு சொம்பு தூய்மையான பசும்பாலை ஊற்றி வழிபட வேண்டும். சந்திர கிரகத்தால் தோஷம் அடைந்தவர்கள் திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, ஐந்து விளக்குகளில் நெய் ஊற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு சிவபெருமானையும் சந்திர பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வணங்க வேண்டும்.

சந்திரன் மாத்ருகாரகன், அதாவது ஒரு மனிதனின் தாய்க்கு காரகனாகிறார். எனவே தனது தாயாரை வாழ்நாள் முழுவதும் நன்கு கவனித்து வருபவர்களுக்கும், தாயாரிடம் ஆசி பெறுபவர்களுக்கும் சந்திர தோஷங்களால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. சிவன் கோவில்களில் சிவனுக்கு பாலாபிஷேகத்திற்கு பசும் பாலும், பௌர்ணமி தினங்களில் கோவில்களில் நடைபெறும் அன்னதானத்திற்கு அரிசியையும் தானம் வழங்குவது போன்ற செயல்களால் நாம் சந்திரனின் நல்லாசிகளை பெற முடியும் அதோடு தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!