நீண்ட நாட்களாக நோய் குணமாகவில்லையா? வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போங்க..!

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார்.



சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும். வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார்.

வைத்தீஸ்வரன் ஆலயத்தில், நவக்கிரகங்கள் வரிசையாக, மூலவரின் சன்னிதிக்கு பின்புறம் அமைந்திருக்கின்றன. இங்கு அங்காரகனுக்கு தனிச் சன்னிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு, உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. அங்காரகனுக்கு ஏற்பட்ட செங்குஷ்ட நோயை, இத்தல இறைவன் தீர்த்து அருளினார். எனவே இந்த ஆலயம் அங்காரகத் தலமாக விளங்குகிறது. அங்காரக (செவ்வாய்) தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் நீங்கும்.

புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, வைத்தீஸ்வரன் கோவில். கும்பகோணம்- சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ளது மயிலாடுதுறை. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ‘சித்தாமிர்த தீர்த்தம்’ சிறப்புக்குரியது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும். நோய் தீர்வதற்காக, குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது.

வைத்தீஸ்வரன் கோவில் ஜடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!