அன்னையர் தினத்தன்று இறந்த தாய்க்கு கோவில் கட்டிய பா.ஜனதா எம்.எல்.ஏ.!

யாதகிரி அருகே இறந்த தாய்க்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் கோவில் கட்டி உள்ளார். அந்த கோவிலை அன்னையர் தினமான நேற்று அவர் திறந்தார்.

மண்ணில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயின் மீது எப்போதும் அளவு கடந்த அன்பு இருக்கும். மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி இந்த உலகில் தாயின் அன்பை விட சிறந்த ஒன்று இந்த உலகில் கிடையாது.

சில சந்தர்ப்பத்தில் மனிதர்கள் தங்களை பெற்று வளர்த்த தாயை தெருவில் விட்டு செல்லும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன. ஆனால் இறந்து போன தனது தாயின் நினைவாக பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் கோவில் கட்டி உள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜூ கவுடா. இவரது பெற்றோர் ஷம்புகவுடா- திம்மம்மா.

விவசாய பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வந்த திம்மம்மா கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இது தாயின் மீது அளவு கடந்த பாசம் வைத்த ராஜூ கவுடா எம்.எல்.ஏ.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாயின் இறப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்த அவருக்கு பலரும் ஆறுதல் கூறி இருந்தார்கள்.

இந்த நிலையில் இறந்து போன தனது தாயின் நினைவாக அவருக்கு கோவில் கட்ட ராஜூ கவுடா எம்.எல்.ஏ. முடிவு செய்தார். இதற்காக அவர் ஆந்திராவை சேர்ந்த சிற்ப கலைஞரின் உதவியை நாடினார். அவர்களும் கோவில் கட்டி தர முன்வந்தனர்.

இதையடுத்து ராஜஸ்தானுக்கு சென்ற ராஜூ கவுடா எம்.எல்.ஏ., கோவில் கட்டுவதற்காக தரமான கற்களை வாங்கி கொண்டு யாதகிரி வந்தார். பின்னர் ஆந்திர சிற்ப கலைஞர்களின் உதவியுடன் சுராப்புரா அருகே ஸ்வக்ரம கோடகல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், தனது தாய்க்கு கோவில் கட்டும் பணியில் ராஜூ கவுடா எம்.எல்.ஏ. மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த கோவில் கட்டும் பணி முழுமையாக நிறைவு பெற்றது. அந்த கோவிலில் ராஜூ கவுடா தாயின் உருவச்சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அன்னையர் தினத்தன்று தனது தாயின் கோவிலை திறக்க ராஜூ கவுடா முடிவு செய்தார்.

அதன்படி அன்னையர் தினமான நேற்று ராஜூ கவுடா எம்.எல்.ஏ., தனது தாயின் நினைவாக கட்டிய கோவிலை திறந்தார். இதில் சுராப்புரா தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ராஜூகவுடா எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கினர்.

இதுகுறித்து ராஜூ கவுடா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

நான் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பதற்கு எனது தாய்-தந்தை தான் முழு காரணம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு எனது தாய் தான் காரணம். என்னுடைய சிறு வயதில் குடும்பம் வறுமையில் வாடிய போதும் விவசாய பணிகள், பல்வேறு வேலைகளை செய்து எனது தாய் என்னையும், எனது தம்பியையும் படிக்க வைத்து எங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். கடந்த ஆண்டு எனது தாய் இறந்தார். அவரை கவுரவிக்கும் வகையிலும், அவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும் இந்த கோவிலை உருவாக்கி உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோவில் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்க்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!