பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனாவால் மரணம்!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்மபக் கால கட்டத்தில் மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையை துவங்கினார் திலக். அதை தொடர்ந்து 1981-ம் ஆண்டு வெளியான ‘கல்தூண்’ என்கிற படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார்.

அன்று முதல் இவரை சினிமாவில் பலரும் ‘கல்தூண்’ திலக் என்றே அழைக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’, ‘பேர் சொல்லும் ஒரு பிள்ளை’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்தார்.


தமிழ் சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கல்தூண் திலக், பெரும்பாலும் வில்லன் வேடங்களையே ஏற்று நடித்தார். திரைப்படம் மட்டுமில்லாமல் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த பெரும்பாலான சீரியல்களில் இவரும் நடித்தார்.

சென்னையில் குடும்பத்தாருடன் வசித்து வந்த கல்தூண் திலக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்ததுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: newstm * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!