அனைவருக்கும் நன்றி.. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின் பேட்டி

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:

திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.

10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைவரை முறையாக தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!