துணையிடம் பேசும் சின்ன சின்ன பொய்கள்… உறவை அழகாக்கும்!

சில சந்தர்ப்பங்களில் துணையிடம் பேசும் சின்ன சின்ன பொய்கள் கூட உறவை அழகாக்கும். துணையை மன மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் செய்யும். அப்படிப்பட்ட பொய்களை எந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் சொல்லலாம் என்பது குறித்து பார்ப்போம்.


திருமணமான புதிதில் தம்பதியரிடையே இருக்கும் அன்னியோன்யம்தான் இருவருக்கும் இடையேயான உறவு பந்தத்தை பலப்படுத்தும். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும். ஒளிவு மறைவின்றி பேசவும், பழகவும் அடிகோலும். தம்பதியரிடையேயான உறவு வலுப்பெற இருவருக்கும் இடையே எந்தவொரு ஒளிவு மறைவும் இருக்கவும் கூடாது. சில சந்தர்ப்பங்களில் துணையிடம் பேசும் சின்ன சின்ன பொய்கள் கூட உறவை அழகாக்கும். துணையை மன மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் செய்யும். அப்படிப்பட்ட பொய்களை எந்த மாதிரியான விஷயங் களுக்கெல்லாம் சொல்லலாம் என்பது குறித்து பார்ப்போம்.

திருமணமான புதிதில் பெண்கள் ஆடை, அலங்கார விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன் மூலம் தன் துணைக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்றும் மெனக்கெடுவார்கள். அந்த அலங்காரத்தில் துணையின் கருத்தையும் எதிர்பார்ப்பார்கள். மனைவி அணிந்திருக்கும் ஆடை பொருத்தமில்லாததாக இருந்தால் கூட ‘இந்த உடை உன்னை ரொம்ப அழகாக காட்டுகிறது’ என்று பொய் சொல்லலாம். கூடவே எந்த மாதிரி டிசைன் கொண்ட ஆடைகள் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பதையும் பட்டியலிடலாம். அடுத்த முறை அதன்படியே மனைவி செயல்பட தொடங்கிவிடுவார்.

வெளி இடங்களுக்கு கிளம்பும்போதெல்லாம் பெண்கள் முகத்திற்கு ஒப்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இயல்பான அழகுதான் சில ஆண்களின் ரசனையாக இருக்கலாம். மித மிஞ்சிய ஒப்பனை பெண்களின் அழகை குறைத்துவிடவும் செய்யலாம். அதனை வெளிப்படையாக மனைவியிடம் விமர்சிப்பது அவரை வேதனையில் ஆழ்த்திவிடும். தன் அழகை குறை சொல்கிறாரோ என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடும். அந்த சமயத்தில் ‘முன்பை விட நீ அழகாக இருக்கிறாய்’ என்று பொய் சொல்லலாம். ஆனால் அதிக மேக்கப் உன் அழகுக்கு அழகு சேர்க்கவில்லை. எப்போதும் போல் இயல்பாக இருப்பதுதான் உனக்கு அழகு சேர்க்கும்’ என்று பக்குவமாக சொல்லி புரிய வைக்கலாம்.

திருமணமான சில மாதங்களில் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. மனைவி சற்று உடல் எடை கூடி இருந்தால் அவரது உருவத்தை கேலி செய்வது கூடாது. அது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திவிடும். ‘உடல் எடை அதிகரித்தாலும் உன் அழகு குறையவில்லை. சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்துவந்தால் இன்னும் அழகாக தெரிவாய்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அதை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் அவரே ஈடுபட தொடங்கிவிடுவார்.

தம்பதியரிடையே ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது இருவரில் யாராவது ஒருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம். துணை கூறும் கருத்துக்கள் தவறாக இருந்தாலும் கூட அந்த சமயத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் ஆமோதிக்கலாம். ‘நீ சொல்வது சரிதான்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அவர் இயல்பான மனநிலைக்கு திரும்பியதும் நிறை, குறைகளை சுட்டிக்காட்டலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு உண்டாகும்.

மனைவி குடும்ப தலைவியாக இருக்கும் பட்சத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் கணவரிடம் நேரம் செலவிடுவதற்கு மனைவி விரும்புவார். அப்போது சுவாரசியமில்லாத விஷயங்களை பேசினாலும் கூட அதனை காதுகொடுத்து கேட்க முன்வர வேண்டும். அவர் கூறும் நகைச்சுவை சிரிப்பை வரவழைக்காவிட்டாலும் சிரிப்பதில் தவறில்லை. அது கணவன்-மனைவி உறவை மேலும் அழகாக்கும்.

திருமணமான புதிதில் மனைவியின் சமையல் கைப்பக்குவம் ருசியாகத்தான் இருக்கும். ஆனால் சமைக்கும் எல்லா உணவுகளிலும் அந்த ருசியை எதிர்பார்க்க முடியாது. கணவருக்கு விதவிதமாக சமைத்து போடுவதற்கு மனைவி விரும்பவும் செய்வார். அதனை புரிந்து கொள்ளாமல் சமைக்கும் உணவுகளையெல்லாம் குறை சொல்வது கூடாது. ‘உன் சமையல் சூப்பராக இருக்கிறது. அதிலும் உன் சமையலில் இந்தெந்த குழம்புகள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அப்படி சொன்னால் அடுத்த முறை அதை விட ருசியாக சமைப்பதற்கு ஆர்வம் காட்டுவார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!