நீங்கள் ஸ்மார்ட்டான நபரா..? அப்ப இது உங்களுக்கு

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் காலத்தில் நாம் ஸ்மார்ட்டாக இருக்கிறோமா? என்பதை அறிந்து கொண்டால் நிறைவான வாழ்க்கையை வாழ இயலும். அதை கண்டறியும் சில வழிகள்…


சிந்தனை என்பது ஒருவழியில் இருந்து மற்றொரு வழியில் வடிவங்களை மாற்றும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சிந்திக்கும் திறனால் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். படைப்பாற்றல் கொண்டவர்கள் பிரச்சனைகளை அணுகுவதில் உள்ள நுட்பமான முறைகளால் பிரச்சனைக்கான தீர்வு எளிதில் கிடைக்கும்.

எந்தவொரு சிக்கலையும் நினைத்து கொண்டிருந்தால் மட்டுமே தீர்வை கண்டுபிடிக்க முடியாது. குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகவே இருக்கும். எனவே சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு முன்பு நிதானமாக சிந்திப்பதும் பின்னர் செயல்படுவதும் நம்மை ஸ்மார்ட் ஆக்கும்.

தினமும் நம்மை சுற்றி பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப நம்மை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். புது விஷயங்களை கற்கும் ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும். வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையின் யதார்த்தங்களை கற்று தந்துவிடாது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்களிடம் அதற்கான புத்துசாலித்தனமும் இருக்கும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து. அறிவு, நேரம், முயற்சி, தனித்திறன் ஆகியவற்றை எவ்வாறு செலவிடுகிறோம் என்ற அடிப்படையில் புத்திசாலித்தனம் உருவாகிறது.

நம்மிடம் உள்ள குறைகளோ, நிறைகளோ அதை சத்தமாக உரக்க சொல்லி கேட்டுப்பாருங்கள். நிறைகளை பாராட்டும் பண்பும், குறைகளை திருத்தி கொள்ளும் திறனும் இதனால் வளரும். மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நமக்குள்ளேயே சத்தமாக பேசி கொள்வதால் சுயகட்டுப்பாடு மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எந்த செயலை செய்வதாலும் அதில் மற்றவர்கள் ஆராய்ந்து கட்டுப்பாடு விதிப்பதற்கு பதிலாக நாமே சுயக்கட்டுப்பாட்டுடன் அணுகி எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். அதனால் தவறுகளை திருத்தி கொள்ளும் திறன் வளரும்.

எந்தவொரு விஷயத்திலும் நம் அணுகுமுறை மற்றும் எடுக்கும் முடிவு ஆகியவை சரியாகஇருக்கும் என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும். பலரிடம் ஆலோசனை கேட்டு கொண்டாலும், இறுதி முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும்.

மற்றவர்களுடன் எளிதில் பழகும் திறன் இல்லாதவர்களால் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியாது. நகைச்சுவை உணர்வு சுற்றியிருப்பர்களை மட்டுமில்லாமல் நம்மையும் சந்தோஷமான மனநிலையில் வைத்திருக்க உதவும். அதனால் எடுக்கும் முடிவுகளில் தெளிவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனும் இருக்கும்.

பேசும் விஷயத்தில் பிறர் கருத்துகளை அப்படியே பிரதிபலிப்பவராக இல்லாமல் நம் கருத்துகளை உரக்க சொல்லும் திறன் எப்போதும் இருக்க வேண்டும். அதுவே நம் புத்துசாலித்தனத்தை வெளிக்காட்டுவதுடன் நம்பிக்கையையும் அதிகரிக்கச்செய்யும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!