முதல் குழந்தையின் பெற்றோரா? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்

முதல் குழந்தை பெற்றவர்களுக்கு இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

நீங்கள் முதல் குழந்தையின் பெற்றோரா? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்
முதல் குழந்தையை பெற்றவர்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியவை
குழந்தை வளர்ப்பு என்பது ரசனையானது மட்டுமல்ல, கடினமானதும் பொறுப்புமிக்கதும் கூட. அதுவும் முதல் குழந்தை பெற்றவர்களுக்கு இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் தாயின் அணைப்பிலும், பாதுகாப்பிலும் இருப்பதையே விரும்புவார்கள். அந்த நிம்மதியே அவர்களின் மனவளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது.

குழந்தைகளுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பது ஆரோக்கிமானது. தடுப்பூசிகளை தவறாமல் போட்டுவிட வேண்டும்.

பிறந்த குழந்தையை எந்த காரணத்திற்காகவும் குலுக்குவது கூடாது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.

குழந்தைகளுக்கு பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருநாளைக்கு 16 மணிநேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு தூக்க நேரமும் 2-4 மணிநேரங்கள் இருக்கும்.

குழந்தைகளின் நகங்கள் வேகமாக வளரக்கூடியவை. இதனால் குழந்தை கை, கால்களை அசைக்கும் போது கீறல்களை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் அடிக்கடி குழந்தையின் நகங்களை வெட்டி விட வேண்டியது அவசியம்.

பிறந்த மூன்று வாரங்கள் வரை மிருதுவான துணியால் குழந்தையின் உடம்பை துடைத்தால் போதும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இது போன்று செய்தால் போதுமானது. மிகவும் சூடான தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ குழந்தைகளை குளிக்க வைக்க கூடாது.

பிறந்தது முதல் 6 மாதம் அவர்களுக்கு தாய்ப்பால் மிக அவசியமானது. தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளை தொற்றுகளிலிருந்து பாதுகாக்க கூடியது தாய்ப்பாலே. அதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.

பிறந்த குழந்தையை தூக்கும் போது தலைக்கு கைகளை கொடுத்து தூக்க வேண்டியது மிக அவசியம்.

பிறந்து 2 வாரம் முடிந்த உடன், குழந்தையை கொஞ்சுவது ஒலி எழுப்பி கூப்பிடுவது குழந்தையிடம் பேசுவது போன்ற செயல்களை செய்தால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

6 மாதங்களுக்கு பின் தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கத்தொடங்கலாம். 2 வயதில் பெரியவர்கள் உண்ணும் உணவுகளை குழந்தையும் உண்ணும் வகையில் பழக்க வேண்டும்.

7-8 மாதத்தில் பேச ஆரம்பிக்கையில் அவர்களுடன் வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். அதே சமயம் இயற்கை உபாதைகள் வந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில் அவர்களை பழக்கிவிட வேண்டும்.

கவனமாக இருந்தால் குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!