5ஜி ஐபோன் மாடல்களில் இப்படி ஒரு சங்கதியா?

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் மாடல்களில் இப்படி ஒரு சங்கதி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடல்களில் டவுன்லோட் வேகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தையில் கிடைக்கும் சுமார் 25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 5ஜி டவுன்லோட் வேகம் ஐபோன் மாடல்களை விட அதிகமாக இருக்கிறது என ஒபன்சிக்னல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 60 சதவீதம் சாம்சங் நிறுவன மாடல்கள் ஆகும். ஐபோன் பயனர்களின் ஒட்டுமொத்த 4ஜி டவுன்லோட் வேகத்தை விட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களில் 2.3 மடங்கு அதிவேக டவுன்லோட் கிடைத்தது. 5ஜி டவுன்லோட் வேகத்தை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி 56Mbps வேகம் கொடுத்து முதலிடம் பிடித்து இருக்கிறது. டிசிஎல் ரெவல் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 8டி பிளஸ் முறையே 49.8Mbps மற்றும் 49.3Mbps வேகம் கொடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்து உள்ளன.

5ஜி கிடைக்கும் பகுதிகளில் ஆப்பிள் பயனர்கள் சாம்சங் மாடல்களில் கிடைப்பதை விட 18 சதவீதம் குறைவான டவுன்லோட் வேகத்தை அனுபவிக்கின்றனர். இதுபற்றிய தகவல்கள் நவம்பர் 11, 2020 முதல் பிப்ரவரி 26, 2021 வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளன. அதிவேக 5ஜி டவுன்லோட் வழங்கிய மாடல்களின் டாப் 10 பட்டியலில் மற்ற இரண்டு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

இதுதவிர மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான மோட்டோரோலா ரேசர் 5ஜி, சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் போல்டு 2 5ஜி உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் முறையே 44Mbps, 44.7Mbps மற்றும் 39.4Mbps வேகம் கொடுத்துள்ளன.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி