9 மாத ஆண் குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற கொடூர தந்தை!

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், 9 மாத ஆண் குழந்தையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், 9 மாத ஆண் குழந்தையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பேஸ்புக் காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சிவமூர்த்தி (வயது 23). இவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (24) என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக காதல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான அபிநயாவிற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.


பெற்றோர் ஏற்க மறுப்பு
அந்த குழந்தைக்கு ஜெய்கிருஷ்ணா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் குழந்தையுடன் சிவமூர்த்தியின் சொந்த கிராமத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை சிவமூர்த்தியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் அவர்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.


பின்னர் அபிநயா குழந்தையுடன் கடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே சிவமூர்த்தியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அபிநயா குழந்தையுடன் தனது கணவர் வீட்டிற்கு வந்தார்.


விசாரணை
அப்போது அபிநயாவிற்கும், கணவர் மற்றும் அவரது மாமனார், மாமியார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 26-ந் தேதி குழந்தையை தனது கணவர் சிவமூர்த்தியிடம் கொடுத்து விட்டு அபிநயா வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.


அப்போது குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்தது. இதையடுத்து குழந்தையை ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


சாவில் சந்தேகம்
அங்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை தாக்கப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அபிநயாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அபிநயா தான் குழந்தையை தனது கணவரிடம் கொடுத்து சென்றதாக தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து ராயக்கோட்டை போலீசார் சிவமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் எனக் கூறி அனுப்பினார்கள்.


தந்தை கைது
இந்த நிலையில் சிவமூர்த்தி கொப்பகரை கிராம நிர்வாக அலுவலர் சசிகுமாரிடம் நேற்று சரண் அடைந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், குழந்தையை சுவரில் அடித்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து சிவமூர்த்தி ராயக்கோட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே பேஸ்புக்கில் பெண்ணை காதலித்து திருமணமும் செய்து, அவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் பெற்ற குழந்தையை தந்தையே சுவற்றில் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!